தமிழ்நாடு

ஊட்டியில் கார் மீது படர்ந்திருக்கும் உறைபனியை காணலாம்.

ஊட்டியில் கொட்டி தீர்க்கும் உறைபனி குளிரால் மக்கள் அவதி

Published On 2022-11-22 06:51 GMT   |   Update On 2022-11-22 06:51 GMT
  • நேற்று காலை முதல் ஊட்டியில் லேசான பனிப்பொழிவு காணப்பட்டது.
  • ஊட்டியில் இன்று குறைந்தபட்ச வெப்பநிலை 7 டிகிரி செல்சியசும், அதிகபட்ச வெப்பநிலை 17 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகி இருந்தது.

ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் இறுதி வாரம் முதல் பிப்ரவரி இறுதி வரையிலோ அல்லது மார்ச் முதல் வாரம் வரையிலோ உறைபனி விழுவது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு மாத தொடக்கத்தில் மழை பொழிவு இருந்ததால் பனிக்காலம் தொடங்குவதில் கால தாமதம் ஏற்பட்டது.

கடந்த வாரம் முழுவதும் மாவட்டத்தில் நீர் பனி கொட்டியது. இதனால், மாவட்டத்தில் பெரும்பாலான தேயிலை தோட்டங்களில் உள்ள செடிகள் கருக துவங்கின.

இந்த நிலையில் நேற்று காலை முதல் ஊட்டியில் லேசான பனிப்பொழிவு காணப்பட்டது.

இன்று ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், உறைபனி விழுந்தது. தலைகுந்தா, பைக்காரா, கிளன்மார்கன், சூட்டிங்மட்டம், கோத்தி போன்ற பகுதிகளில் உறைபனி கொட்டி கிடந்தது. இதனால், புல் மைதானங்கள் அனைத்தும் வெள்ளை கம்பளம் விரித்தார் போல வெண்மை நிறத்தில் காட்சி அளித்தது.

இதேபோல் தாவரவியல் பூங்கா, தாழ்வான பகுதிகளில் இருக்க கூடிய புல்வெளிகளிலும் உறைபனி காணப்பட்டது.

காலையில் கடும் குளிர் நிலவி வருகிறது. இருப்பினும் நடைபயிற்சி, விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபடுவோர் வழக்கமாக பயிற்சிகளில் ஈடுபட்டனர்.

ஊட்டியில் இன்று குறைந்தபட்ச வெப்பநிலை 7 டிகிரி செல்சியசும், அதிகபட்ச வெப்பநிலை 17 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகி இருந்தது. உறைபனியுடன் கடும் குளிரும் வாட்டுவதால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மற்றும் பணிக்கு செல்வோர் மிகுந்த சிரமம் அடைந்தனர்.

Tags:    

Similar News