வக்கீல் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: மர்ம கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை
- மாரிச்செல்வம் வீட்டின் முன் பகுதியில் கிடந்த பொருட்கள் சேதம் அடைந்தன.
- ரேஷன் அரிசி கடத்தல் கும்பலின் வாகனத்தை சமீபத்தில் விருதுநகரில் வைத்து போலீசார் பிடித்துள்ளனர்.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜு நகர் பகுதியை சேர்ந்தவர் மாரிச்செல்வம். இவர் வக்கீல் தொழில் செய்து வருகிறார்.
நேற்று நள்ளிரவில் அவரது வீட்டுக்கு கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வந்த ஒரு கும்பல் மாரிச்செல்வம் வீட்டின் மீது அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுகளை வீசியது.
இதில் மாரிச்செல்வம் வீட்டின் முன் பகுதியில் கிடந்த பொருட்கள் சேதம் அடைந்தன. மேலும் மாரிச்செல்வம் பக்கத்து வீட்டு முன்பு நிறுத்தி வைத்திருந்த அவரது வாகனத்தையும் அந்த கும்பல் சேதப்படுத்திவிட்டு தப்பி சென்றது.
மேலும் மாரிச்செல்வத்திற்கு சொந்தமான ஊத்துப்பட்டி செல்லும் சாலையில் உள்ள தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தையும் அந்த கும்பல் தீ வைத்து விட்டு தப்பி சென்றது.
இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்தில் மாரிச்செல்வம் அளித்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் வழக்குப்பதிவு செய்து மாரிச்செல்வத்துக்கு தொழில் ரீதியாக ஏதேனும் முன் விரோதம் ஏற்பட்டு அந்த பிரச்சனையில் யாரேனும் பெட்ரோல் குண்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மாரிச்செல்வத்துக்கு தெரிந்த சிறுவனை ரேஷன் அரிசி கடத்தல் கும்பல் ஒன்று வீடுகளில் ரேஷன் அரிசி வாங்கி தர கட்டாயப்படுத்தி தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வக்கீல் மாரிச்செல்வம் அந்த கும்பலிடம் கேள்வி கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. இதற்கிடையே ரேஷன் அரிசி கடத்தல் கும்பலின் வாகனத்தை சமீபத்தில் விருதுநகரில் வைத்து போலீசார் பிடித்துள்ளனர்.
இதனால் வக்கீல் மாரிச்செல்வம் தான் தகவல் கொடுத்திருக்க வேண்டும் என்று நினைத்து ஆத்திரமடைந்த அந்த கும்பல் இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
எனினும் வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கலாமா? என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.