செல்லப்பிராணிகள் உரிமம்: முறையான ஆவணங்கள் இல்லாததால் 3,500 விண்ணப்பங்கள் நிராகரிப்பு
- இதுவரையில் 1500 நாய்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
- தினமும் 300-க்கும் மேற்பட்டவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பிக்க ஆர்வம் காட்டுவதால் சர்வர் செயல்பாடு வேகம் குறைந்தது.
சென்னை:
சென்னையில் செல்லப் பிராணிகளை வீடுகளில் வளர்க்க மாநகராட்சியில் உரிமம் பெற வேண்டும். ஆனால் யாரும் அதனை பொருட்படுத்துவது இல்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆயிரம் விளக்கு பூங்கா ஒன்றில் சிறுமியை நாய் கடித்து குதறியதில் அந்த சிறுமி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவளுக்கு தலையில் அறுவை சிகிச்சை நடந்துள்ளது.
சிறுமியை கடித்த அந்த நாய் வீட்டில் வளர்க்கப்பட்ட ஒருவரின் நாய் ஆகும். அதனால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து சென்னையில் நாய், பூனைகள் வளர்ப்பவர்கள் கட்டாயம் உரிமம் பெற வேண்டும். இல்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஆன்லைன் வழியாக உரிமம் பெற்று வருகின்றனர்.
இதுவரையில் 1500 நாய்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. தினமும் 300-க்கும் மேற்பட்டவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பிக்க ஆர்வம் காட்டுவதால் சர்வர் செயல்பாடு வேகம் குறைந்தது. இதனால் அதனை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து மாநகராட்சி கால்நடை மருத்துவர் கமால்பாஷா கூறியதாவது:-
ஒரே நேரத்தில் விண்ணப்பிப்பதால் இணைய தளத்தின் வேகம் குறைகிறது. இதனால் விண்ணப்பிக்க முடியாமல் சிரமம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அதனை சரி செய்யும் பணி நடக்கிறது. இன்று மாலைக்குள் சரியாகி விடும்.
1200 நாய்களுக்கு உரிமம் கொடுக்கப்பட்டுள்ளது. 2500 நாய்களுக்கு உரிமம் வழங்குவது நடைமுறையில் உள்ளது. மேலும் முறையான ஆவணங்கள் இல்லாததால் 3,500 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது என்றார்.