பேக்கரி கடையில் ரூ.30 ஆயிரத்தை திருடி சுவீட், மிக்சரை ருசித்த கும்பல்
- மர்ம நபர்கள் 2 பேர் பேக்கரி கடையின் பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த கீழ் புதுப்பேட்டை சோளிங்கர் சாலையில் ஏழுமலை (வயது 44 ) என்பவர் பேக்கரி மற்றும் சுவீட் கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் சம்பவத்தன்று இரவு வழக்கம் போல ஏழுமலை மற்றும் கடை ஊழியர்கள் வியாபாரம் முடிந்தவுடன் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றனர். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் 2 பேர் பேக்கரி கடையின் பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தனர். பின்னர் 2 பேரும் கடையின் உள்ளே இருந்த மிக்சர், சுவீட், கேக் ஆகியவற்றை வயிறார ருசித்து சாப்பிட்டனர். நன்றாக வயிறு நிரம்ப சாப்பிட்ட பிறகு கல்லாப்பெட்டியில் இருந்த ரூ. 20 ஆயிரம் பணம் மற்றும் திருப்பதி உண்டியலில் இருந்த ரூ. 10 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
பின்னர் மீண்டும் மறுநாள் காலை ஏழுமலை கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கடையின் கல்லாப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.20 ஆயிரம் மற்றும் திருப்பதி உண்டியலில் வைக்கப்பட்டிருந்த ரூ.10 ஆயிரம் பணம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து ஏழுமலை வாலாஜா போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் பேக்கரி கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் திருடர்கள் 2 பேரும் சுவீட், கேக், மிக்சரை ருசித்து சாப்பிட்டுவிட்டு கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது . இது சம்பந்தமாக வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.