சென்னையில் அதிரடி சோதனை: வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டியவர்களுக்கு போலீசார் அபராதம்
- தனியார் வாகனங்களில் அரசால் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது.
- சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் சுமார் 100 இடங்களில் அதிரடி வாகன சோதனை நடத்தப்பட்டது.
சென்னை:
சென்னையில் உள்ள தனியாருக்கு சொந்தமான வாகனங்களில் சமீப காலமாக பத்திரிகை, ஊடகம், போலீஸ், வழக்கறிஞர், மருத்துவர், மாநகராட்சி, உயர்நீதிமன்றம், தலைமை செயலகம், மின்சாரத்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட துறை சார்ந்த ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுவது அதிகரித்து வருகிறது.
மேலும் இதுதொடர்பாக போக்குவரத்து போலீசார் ஆய்வு செய்தபோது, பலர் தங்கள் வாகனங்களில் ஒட்டி இருக்கும் ஸ்டிக்கர்களுக்கும், அவர்களுக்கும் சம்பந்தம் இல்லை என்பதும், போலியாக ஸ்டிக்கர்களை ஒட்டி இருப்பதும் தெரியவந்தது.
குறிப்பாக குற்றச்செயல்களில் ஈடுபடும் சிலர் இதுபோன்ற ஸ்டிக்கர்களை ஒட்டி போலீசாரின் கவனத்தை திசை திருப்பி தப்பி முறைகேடுகளில் ஈடுபடுவதும் கண்டு பிடிக்கப்பட்டது. மேலும் பலர் வாகன நம்பர் பிளேட்டுகளில் பெரிதாக ஸ்டிக்கர் ஒட்டி, வாகன பதிவு எண்களை மிகவும் சிறியதாக எழுதியுள்ளனர். இதனால் சாலைகளில் விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களை முக்கிய சாலை சந்திப்புகளில் ஏஎன்பிஆர் பொருத்தப்பட்ட கேமராக்கள் மூலம் துல்லியமாக கண்டறிந்து வழக்குப்பதிவு செய்ய முடியவில்லை.
சென்னையில் 16 சந்திப்புகளில் 76 ஏஎன்பிஆர் கேமராக்கள் உள்ளன. அவைகளில் சிறிதாக எழுதப்பட்ட பதிவு எண் சிக்குவதில்லை.
எனவே இதுபோல போலியாக ஸ்டிக்கர் ஒட்டுபவர்களை கண்டுபிடிக்கவும், வாகன பதிவு எண்களை சிறிதாக எழுதுவதை தடுக்கும் வகையிலும், போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் சுதாகர் கடந்த 27-ந்தேதி ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டார்.
அதில், 'சென்னையில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் தங்கள் வாகனங்களில் ஊடகம், போலீஸ் என பல்வேறு துறைகளை சார்ந்த ஸ்டிக்கர்களை ஒட்டி தவறாக பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் அவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டு போலீசாரிடம் இருந்து எளிதாக தப்பி விடுகிறார்கள்.
எனவே தனியார் வாகனங்களில் அரசால் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது. அவ்வாறு ஸ்டிக்கர் ஒட்டி இருப்பவர்கள் மே 1-ந்தேதிக்குள் அதை அகற்றிக்கொள்ளலாம். அப்படி அகற்றாமல் விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது இன்று முதல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு மோட்டார் வாகன சட்டத்தின் படி அபராதம் விதிக்கப்படும். மேலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்' என்று எச்சரித்தார்.
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட துறை சார்ந்தவர்கள் தங்களின் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ள போக்குவரத்து போலீசார் அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். இதையடுத்து அதுபோன்றவர்கள் தங்கள் வாகனங்களில் தங்களின் துறைகளை குறிப்பிட்டு ஸ்டிக்கர் ஒட்டிகொள்ள போக்குவரத்து போலீசார் அனுமதி அளித்துள்ளனர். அதே நேரத்தில் அந்த துறைக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் ஊடகம், வக்கீல், மருத்துவர் என ஸ்டிக்கர் ஒட்டினால் கடும் நடவடிக்கை பாயும் என்றும் போலீசார் எச்சரித்து இருந்தனர்.
அதே போன்று வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது என்றும் போக்குவரத்து போலீசார் விளக்கம் அளித்துஉள்ளனர்.
அதன் அடிப்படையில் சென்னையில் விதிகளை மீறி வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டியவர்களுக்கு அபராதம் விதிப்பதற்காக போலீசார் இன்று முதல் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டனர். இதற்காக சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் சுமார் 100 இடங்களில் இந்த அதிரடி வாகன சோதனை நடத்தப்பட்டது.
இன்று காலையில் இருந்தே போலீசார் கடுமையான வாகன சோதனை நடத்தி விதிமுறைகளை மீறி நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும் விதிமுறைகளை மீறி போலியாக ஸ்டிக்கர் ஒட்டி இருந்தவர்களுக்கும் போலீசார் அபராதம் விதித்தனர். இன்று முதல் முறையாக விதிமீறலில் ஈடுபட்ட வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் ரூ.500 அபராதம் விதித்தனர். முதல் முறை வழக்குப்பதிவு செய்யப்பட்ட பின்னரும் 2-வது முறையாக விதிமீறலில் ஈடுபட்டால் ரூ.1,500 அபராதம் விதிக்கப்படும் என்றும் போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பினார்கள்.
வாகனங்களில் நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டியவர்கள், வாகன பதிவு எண்ணை குறிப்பிட்ட அளவை விட சிறியதாக எழுதியவர்கள், சம்பந்தப்பட்ட துறை சாராதவர்கள் தங்கள் வாகனங்களில் பத்திரிகை, ஊடகம், போலீஸ், வக்கீல், மருத்துவர் என போலியாக ஸ்டிக்கர் ஒட்டியவர்கள் ஆகியோர் மீது போலீசார் அதிரடி நடவடிக்கைகளை எடுத்தனர். இந்த அதிரடி சோதனை தொடர்ந்து நடைபெறும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.