மாடு வளர்ப்பவர்களுக்கு பூந்தமல்லி நகராட்சி எச்சரிக்கை: சாலைகளில் திரியவிட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம்
- சட்டம் 1997-ன்படி 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
- இந்திய தண்டனைச் சட்டம் 289-ன்படியும் பிராணிகள் வதைத் தடுப்புச் சட்டம் 11 (எச்)-ன்படியும் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆவடி:
பூந்தமல்லி நகராட்சி பகுதிகளில் கால்நடைகளை வளர்த்து வரும் பொது மக்கள் தங்களது மாடுகளை மாட்டு கொட்டகையில் கட்டி வளர்த்து முறையாகப் பராமரித்து கொள்ள வேண்டும்.
தவறும் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை செய்யவும், மீறுபவர்கள் மீது விலங்குகள் மற்றும் பறவைகள் (கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறை விதிகள்) சட்டம் 1997-ன்படி 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சட்டத்தை மீறும் நபர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 289-ன்படியும் பிராணிகள் வதைத் தடுப்புச் சட்டம் 11 (எச்)-ன்படியும் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பூந்த மல்லி நகராட்சி நிர்வாகம் சார்பில் கால்நடை வளர்ப்பு கண்காணிப்புக் குழு உறுப்பினர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நகரசபை தலைவர் காஞ்சனா சுதாகர் தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் ஸ்ரீதர், ஆணையர் லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கால்நடை உரிமையாளர்களுக்கு மேற்கண்ட சட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் அறிவுரைகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில் குழு உறுப்பினர்களான போலீஸ் அதிகாரிகள், போக்குவரத்து துறை அதிகாரிகள், வட்டார வளர்ச்சித் துறை அதிகாரிகள், வருவாய்த்துறையினர், கால்நடை மருத்துவர்கள் கலந்து கொண்டு கால்நடை உரிமையாளர்களுக்கு கால்நடைகளை சாலையில் திரியவிடாமல் முறையாக வளர்ப்பது குறித்தும், கால் நடைகளால் ஏற்படும் விபத்துக்கள் குறித்தும் அறிவுரைகள் வழங்கினர்.