பழவேற்காடு, பொன்னேரி-மீஞ்சூர் பகுதியில் 4-வது நாளாக மின்சாரம் துண்டிப்பு
- குடிநீர், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
- வீடுகளை சுற்றிலும் வெள்ளநீர் இன்னும் வடியாமல் உள்ளதால் வெளியே வரமுடியாமல் தவித்தபடி உள்ளனர்.
பொன்னேரி:
மிச்சாங் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை கொட்டியது. மேலும் ஆந்திரா பகுதியிலும் பலத்த மழைபெய்தது. இதனால் ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணையில் இருந்து 16 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் ஆரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பொன்னேரி அடுத்த சோமஞ்சேரி, சின்னக்காவனம், தத்தை மஞ்சி ஆகிய 3 இடங்களில் ஆரணி ஆற்றங்கரையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் கிராமங்களுக்குள் புகுந்தது. ஆரணி ஆற்றின் கரை உடைந்து பாதிக்கப்பட்ட பகுதியில் இதுவரை மின்சாரம், குடிநீர் வழங்கப்படாததால் அப்பகுதி மக்கள் குடிநீர், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். 5 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று குடத்தில் தண்ணீர் பிடித்து வரும்நிலை ஏற்பட்டு உள்ளது.
மேலும் சூறைக்காற்றில் பொன்னேரி, மீஞ்சூர் பகுதியில் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்ததில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதம் அடைந்தன. இதனால் 4-வது நாளான இன்னும் பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு பகுதியில் மின்சப்ளை சீராகவில்லை. பொன்னேரி மூகா ம்பிகை நகர், சின்ன க்காவனம், பழவேற்காடு வைரங்குப்பம், கரிமணல், தாழங்குப்பம், பிரளயம்பாக்கம் சோமஞ்சேரி, கம்மார் பாளையம், மீஞ்சூர் அத்திப்ப ட்டு புதுநகர், மேலூர், அரியன்வாயல் உள்ளிட்ட பகுதி களில் இன்னும் மின்தடை உள்ளதால் பொது மக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் வீடுகளை சுற்றிலும் வெள்ளநீர் இன்னும் வடியாமல் உள்ளதால் வெளியே வரமுடியாமல் தவித்தபடி உள்ளனர்.
மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகர் பள்ளம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் உள்ளே புகுந்ததால் அப்பகுதி மக்கள் சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். பழவேற்காடு அடுத்த ஆண்டார் மடம் பகுதியில் தண்ணீர் தேங்கி உள்ளதால் படகில் சென்று வருகிறார்கள்.