தமிழ்நாடு (Tamil Nadu)

சேலம் மாவட்டத்தில் 661 அரசுப் பள்ளிகளுக்கு பிரிண்டர் விநியோகம்- வினாத்தாள் கசிவை தடுக்க ஏற்பாடு

Published On 2023-03-24 09:32 GMT   |   Update On 2023-03-24 09:32 GMT
  • சேலம் மாவட்டத்தில் அரசு நடுநிலைப்பள்ளிகள் 366, உயர்நிலைப்பள்ளிகள் 136, மேல்நிலைப்பள்ளிகள் 159 என மொத்தம் 661 அரசு பள்ளிகளுக்கு பிரிண்டர் வழங்கப்பட்டுள்ளது.
  • பிரிண்டர்களில் பயன்படுத்துவதற்கான பேப்பர்களை வாங்குவதற்காக அனைத்து பள்ளிகளுக்கும் மொத்தம் ரூ.54.13 லட்சம் அனுப்பப்பட்டு உள்ளது.

சேலம்:

அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையில் மாணவர்களுக்கு காலாண்டுத்தேர்வு, அரையாண்டுத் தேர்வு, முழு ஆண்டுத் தேர்வு உள்ளிட்டவை நடத்தும்போது, தேர்வு வினாத்தாள்கள் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அச்சிடப்பட்டு, பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

இதில் நடைமுறை சிக்கல்கள் இருக்கும் நிலையில் தேர்வுக்கு முன்னதாக வினாத்தாள் கசிந்து, முறைகேடு நடைபெறும் வாய்ப்பும் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது.

இதைத் தடுக்க அரசுப் பள்ளிகளுக்கு பிரிண்டர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தேர்வு நாளான்று மின்னஞ்சல் மூலமாக வினாத்தாளை அனுப்பி, அதை அந்தந்த பள்ளிகளிலேயே பிரிண்ட் எடுத்துப் பயன்படுத்தும் வகையில் பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதன்படி, சேலம் மாவட்டத்தில் 661 அரசுப் பள்ளிகளுக்கு பிரிண்டர் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் அரசு நடுநிலைப்பள்ளிகள் 366, உயர்நிலைப்பள்ளிகள் 136, மேல்நிலைப்பள்ளிகள் 159 என மொத்தம் 661 அரசு பள்ளிகளுக்கு பிரிண்டர் வழங்கப்பட்டுள்ளது.

அதில், மாணவ, மாணவிகள் எண்ணிக்கை 500-க்கும் கூடுதலாக கொண்டிருக்கும் பள்ளிகளுக்கு பெரிய அளவிலான பிரிண்டரும், மாணவ, மாணவிகள் எண்ணிக்கை 500-க்கும் குறைவாக இருந்தால் சிறிய பிரிண்டரும் வழங்கப்பட்டுள்ளது.

அவற்றை பயன்படுத்தும் வழிமுறைக் குறித்து, அந்தந்த பள்ளிகளைச் சேர்ந்தவர்களுக்கு சேலத்தில் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. பிரிண்டர்களில் பயன்படுத்துவதற்கான பேப்பர்களை வாங்குவதற்காக அனைத்து பள்ளிகளுக்கும் மொத்தம் ரூ.54.13 லட்சம் அனுப்பப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News