குற்றாலம் அருவிகளில் பொதுமக்கள் குளிக்க 3-வது நாளாக தொடரும் தடை
- குற்றாலத்தில் குளிர்ந்த காற்றுடன் மெல்லிய சாரல் மழை பெய்யும்.
- அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் சீசன் காலமாக கருதப்படும். இந்த காலங்களில் குற்றாலத்தில் குளிர்ந்த காற்றுடன் மெல்லிய சாரல் மழை பெய்யும்.
மேலும் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இந்த அருவிகளில் குளிப்பதற்கும், குளிர்ந்த காற்றுடன் மெல்லிய சாரல் மழையில் நனைவதற்கும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணி கள் குற்றாலம் வருகை தருவார்கள்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தென்காசி, குற்றாலம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் சாரல் மழையினால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் நலன் கருதி குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நேற்று முன்தினம் குளிக்க தடைவிதிக்கப்பட்டது.
குற்றாலம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை அதிகமாக பெய்வதால் அருவிகளில் குளிக்க தடை நேற்று நீட்டிக்கப்பட்ட நிலையில், நீர்வரத்து தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் இன்றும் 3-வது நாளாக மெயினருவி, பழைய குற்றாலம், ஐந்தருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.