தமிழ்நாடு (Tamil Nadu)

காவிரி உபரிநீர் திட்டம் நிறைவேற்ற வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம்

Published On 2024-10-04 06:56 GMT   |   Update On 2024-10-04 06:56 GMT
  • ஒரு லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் 15 லட்சம் பேருக்கு குடிநீர் வசதி கிடைக்கும்.
  • வணிகர்களையும் கட்டாயப்படுத்தி கடையடைப்பு செய்ய சொல்வோ அல்லது கடைகளை மூட வலியுறுத்தி மிரட்டல் விடுப்பதோ குற்றம்.

தருமபுரி:

காவிரி உபரிநீர் திட்டம் நிறைவேற்ற வலியுறுத்தி தருமபுரி மாவட்டம் முழுவதும் பா.ம.க. சார்பில் இன்று காலை 9 முதல் மதியம் 12 மணிவரை அரைநாள் கடையடைப்பு போராட்டம் அழைப்பு விடுவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அசம்பாவிதங்கள் நடைபெறாமல் மாவட்டம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தமிழ்நாட்டின் வறண்ட மாவட்டமாகவும், வேலைவாய்ப்பற்ற பின்தங்கிய மாவட்டமாகவும் தருமபுரி இருந்து வருகிறது. இதனால் தருமபுரியில் காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பத்தாண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதை செயல்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று பா.ம.க. சார்பில் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது.

தருமபுரி காவிரி குடிநீர் திட்டத்திற்கு ஆண்டுக்கு 3 டிஎம்சி மட்டுமே நீர் தேவைப்படும் என்றும், ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக பலநூறு டி.எம்.சி காவிரி நீர் வீணாக கடலில் கலக்கும் நிலையில், இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது. காவிரி ஆற்றின் உபரி நீரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் நிரப்பும் திட்டம் செயல்படுத்த வேண்டும். ரூ.650 கோடி மட்டுமே செலவாகும்.


இந்தத் திட்டத்தால், ஒரு லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் 15 லட்சம் பேருக்கு குடிநீர் வசதி கிடைக்கும். இதன் மூலம் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தருமபுரி மாவட்டம் வளம் பெறும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டினார்.

ஒட்டுமொத்த மாவட்டமும் பயன் பெறும் தருமபுரி காவிரி உபரி நீர்த் திட்டத்தை செயல்படுத்துவதற்காக ரூ.650 கோடியை செலவழிக்க மறுக்கிறது என்று குற்றம்சாட்டிய அன்புமணி, "திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி 4-ந் தேதி (இன்று) வெள்ளிக்கிழமை தருமபுரி மாவட்டம் முழுவதும் அரை நாள் கடையடைப்பு போராட்டம் நடத்த பா.ம.க சார்பில் அழைப்பு விடுத்து இருந்தார்.

இதைத்தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் பா.ம.க. சார்பில் வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், காய்கறி கடைகள், தள்ளுவண்டி கடைகள் என அனைத்து வியாபாரிகள், வணிக நிறுவனத்தினரிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி காவிரி உபரிநீர் திட்டம் நிறைவேற்று வலியுறுத்தி நடத்தப்படும் அரை நாள் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.

இதற்கிடையே எந்த வணிகர்களையும் கட்டாயப்படுத்தி கடையடைப்பு செய்ய சொல்வோ அல்லது கடைகளை மூட வலியுறுத்தி மிரட்டல் விடுப்பதோ குற்றம். எனவே அவ்வாறு செயல்படுவோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.


இயல்பாக வழக்கம் போல் கடை செயல்படவும், வணிகம் மேற்கொள்ளவும் யாதொருவரும் அச்சம் கொள்ள தேவையில்லை. போலீசார் போதுமான பாதுகாப்பு வணிகர்களுக்கும், கடை மற்றும் நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் சாந்தி அறிவித்து இருந்தார்.

தருமபுரி நகரின் முக்கிய பகுதியான பஸ் நிலையம், நேதாஜி பைபாஸ், திருப்பத்தூர் சாலை, பென்னாகரம் சாலை, கிருஷ்ணகிரி பைபாஸ் சாலை, ஆறுமுகஆசாரி தெரு, சின்னசாமி நாயுடு தெரு, அப்துல்முஜீப் தெரு, சித்தவீரப்பசெட்டி தெரு, எஸ்.வி.சாலை மற்றும் பிடமனேரி, இலக்கியம்பட்டி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இன்று காலை முதல் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஒரு சில டீக்கடைகள் காலை 8 மணி வரை திறக்கப்பட்டிருந்தது.

இந்த கடையடைப்பு போராட்டத்தையொட்டி அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க தருமபுரி நகர் பகுதி முழுவதும் மாவட்ட எஸ்.பி. மகேஸ்வரன் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. சிவராமன் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் பஸ் நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதுபோன்று கம்பைநல்லூர், மொரப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு பொதுமக்களின் அடிப்படை தேவைகளான டீ கடை, உணவகங்கள் உள்ளிட்ட எந்த கடைகளிலும் திறக்கப்படவில்லை.

இதுபோன்று பாலக்கோடு கடைவீதி, எம்.ஜி. ரோடு, தர்மபுரி, ஓசூர், பெங்களூர் மெயின் ரோடு, ஸ்துபி மைதானம் ஆகிய பகுதிகளில் வணிகர்கள் அனைத்து கடைகளும் கடை அடைத்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம், நல்லம்பள்ளி, காரிமங்கலம், அரூர் ஆகிய பகுதிகளிலும் இன்று கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. மேலும் மாவட்டம் முழுவதும் அந்தந்த பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.

Tags:    

Similar News