தமிழ்நாடு

ஆதம்பாக்கத்தில் சாலைப் பணிக்கு வீடுகளை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு-மறியல்

Published On 2023-10-19 09:40 GMT   |   Update On 2023-10-19 09:40 GMT
  • மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
  • அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.

ஆலந்தூர்:

சென்னை, ஆதம்பாக்கம், ஜீவன் நகர், 2-வது தெருவில் இருந்து மேடவாக்கம் மெயின் ரோட்டை இணைக்கும் வகையில் சாலை அமைக்கப்பட உள்ளது. இதில் அங்குள்ள கால்வாய் மீது சிறிய பாலமும் கட்டப்பட இருக்கிறது.

இந்த நிலையில் சாலை அமையும் பகுதியில் உள்ள சில வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருப்பதாக கூறி அதனை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர். வீடுகளை காலி செய்யவும் உத்தரவு பிறப்பித்து இருந்தனர். ஆனால் இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதற்கிடையே இன்று காலை தாசில்தார்கள் ராதிகா, காளிதாஸ் தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் வீடுகளை இடிக்கும் பணியை தொடங்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அ.தி.மு.க.கிழக்கு பகுதி செயலாளர் பரணி பிரசாத், முன்னாள் கவுன்சிலர்கள் கோபாலகிருஷ்ணன், நரேஷ் குமார், லோகேஷ் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து மேடவாக்கம் சாலையில் திடீர் மறியிலில் ஈடுபட்டனர். இதேபோல் பா.ஜ.க.வை சேர்ந்த வினோத், இன்பா தலைமையிலும் ஏராளமானோர் பொதுமக்களுக்கு ஆதரவாக மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்கு வாதம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.

Tags:    

Similar News