புதிய அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு
- தமிழக அமைச்சரவையில் நான்கு பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது.
- தமிழகத்தில் நான்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.
தமிழக அமைச்சரவையில் நான்கு பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதோடு ஆறு அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நேற்றிரவு நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், இன்று (செப்டம்பர் 29) மதியம் 3.30 மணிக்கு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில், புதிய அமைச்சர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.
பதவியேற்பு நிகழ்ச்சியில், இரா. இராஜேந்திரனுக்கு முதலில் பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் ஆர்.என். ரவி. இவரைத் தொடர்ந்து தமிழக அமைச்சராக செந்தில் பாலாஜி பதவியேற்றுக் கொண்டார். கோவி செழியன் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். சா.மு. நாசர் மீண்டும் தமிழக அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
பதவியேற்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து புதிய அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதன்படி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை, ஆர். ராஜேந்திந்திரனுக்கு சுற்றுலாத்துறை, டாக்டர் கோவி. செழியனுக்கு உயர்கல்வித்துறையும் சா.மு. நாசருக்கு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.