பொன்னேரி அருகே 100 வீடுகளை மழை தண்ணீர் சூழ்ந்தது
- அணைக்கட்டு முழுமையாக நிரம்பி சுமார் 1 அடி உயரத்திற்கு 2250 கனஅடி தண்ணீர் அணைக்கட்டில் இருந்து வழிந்தோடுகிறது.
- நீர்நிலைகளில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த சீமாவரம் கிராமத்தில் கொசஸ்தலை ஆற்றில் வல்லூர் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் இருந்து வெளிவரும் தண்ணீரால் வல்லூர் தடுப்பணை முழுமையாக நிரம்பி வழிகிறது. அணைக்கட்டு முழுமையாக நிரம்பி சுமார் 1 அடி உயரத்திற்கு 2250 கனஅடி தண்ணீர் அணைக்கட்டில் இருந்து வழிந்தோடுகிறது.
இந்த தடுப்பணையில் இருந்து வழியும் தண்ணீரில் ஆபத்தை உணராமல் சிறுவர்கள் குதித்து நீச்சலடித்தும், டைவ் அடித்தும், குளித்தும் குதூகலமடைந்துள்ளனர். இந்த அணைக்கட்டில் இருந்து நிரம்பி வழியும் தண்ணீர் கொசஸ்தலை ஆற்றின் வழியே எண்ணூர் கடலுக்கு செல்ல உள்ளது. கனமழையால் மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் வல்லூர் அணைக்கட்டு உள்ளிட்ட நீர்நிலைகளில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
பொன்னேரி ஆரணி ஆற்றில் லட்சுமிபுரம் அணைக் கட்டில் இருந்து 900 கன அடி வெளியேறும் மழை நீர் பழவேற்காட்டில் கடலில் கலக்கின்றன. பெய்து வரும் மழையினால் பொன்னேரி பகுதிகளில் 28 வார்டுகளில் மழைநீர் தேங்கியும் பொன்னேரி- மீஞ்சூர் சாலைகளில் தேங்கியுள்ள மழை நீர் வெளியேற முடியாமல் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டுள்ளனர்.
பொன்னேரி அடுத்த தடபெரும்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட துரைசாமி நகர், ஏ ஏ எம் நகர், பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் மழை நீர் சூழ்ந்து காணப்படுகின்றன.