தமிழ்நாடு

இடஒதுக்கீடு கோரி தமிழ்நாடே ஸ்தம்பிக்கும் அளவிற்கு மிகப்பெரிய போராட்டம்- ராமதாஸ் அறிவிப்பு

Published On 2024-07-20 08:30 GMT   |   Update On 2024-07-20 08:30 GMT
  • அரசிடம் கோரிக்கை வைத்தும், முதல்வரை கோட்டையில் சந்தித்தும் பலன் இல்லை.
  • அனைத்து வன்னியர்களும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

திண்டிவனம்:

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் வன்னியர் சங்க 45-வது ஆண்டு விழாவை முன்னிட்டு பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வன்னியர் சங்க கொடியை ஏற்றி வைத்து நிருபர்களை சந்தித்தார்.

வன்னியர் சங்கம் 1980 ஜூலை 20-ல் தொடங்கப்பட்டது. அதன் முதல் கோரிக்கையாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு அதற்கேற்ப எல்லா மக்களுக்கும் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்பது தான். அந்த வகையில் வன்னியர்களுக்கு மக்கள் தொகையில் 20 விழுக்காடு என்பதனால், அவர்களுக்கு 20 விழுக்காடு கொடுக்க வேண்டும். அதேபோல் வன்னியர்களுக்கு 18-ல் இருந்து 22 ஆக உயர்த்திக் கொடுக்கப்பட வேண்டும்.

தீர்மானம் நிறைவேற்றி 44 ஆண்டுகள் 11 ஆயிரம் கிராமங்களில் பரப்புரை செய்து மக்களை சந்தித்து மக்களுடைய குறைகளை சொல்லி சர்வ விகிதாச்சாரங்களை பெற்று பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டது. ஒரு நாள் சாலை மறியல் ஒரு நாள் ரெயில் மறியல் 7 நாள் தொடர் சாலை மறியல் என பல்வேறு போராட்டங்கள் நடத்தி 10.5 என்ற அளவாவது இடஒதுக்கீடு கொடுங்கள் என்று சொன்னபோது அப்போது இருந்த அ.தி.மு.க. அரசு வழங்கினார்கள். அதனை உறுதிப்படுத்த வேண்டும் என்று இந்த அரசிடம் கோரிக்கை வைத்தும், முதல்வரை கோட்டையில் சந்தித்தும் பலன் இல்லை.

45 ஆண்டு காலங்கள் ஆகியது. ஆனால் அந்த கோரிக்கை அப்படியே இருக்கிறது, அதனால் மீண்டும் ஒருமுறை தமிழ்நாடே ஸ்தம்பிக்கும் அளவிற்கு மிகப்பெரிய போராட்டத்தை 7 நாள் சாலை மறியலை விட கடுமையாக செய்தால்தான் இந்த அரசு பணியும் அல்லது கொடுக்கும் என்று நம்புகிறோம். இப்போதுள்ள இளைஞர்கள் ஆர்வமாக துடிப்போடு இருக்கிறார்கள். ஏனென்றால் இவ்வளவு நாள் வஞ்சிக்கப்பட்டதை ஏமாற்றப்பட்டது யாரால் எதனால் என்று புரியாமல் இருந்தவர்களுக்கு நாங்கள் புரிய வைத்திருக்கிறோம்.

அவர்கள் இப்பொழுது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். எனவே இந்த போராட்டம் மிகவும் கடுமையான போராட்டமாக இருக்கும். 45 ஆண்டு அடி எடுத்து வைக்கும் இந்த தினத்தில் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு ஒட்டுமொத்த சமுதாயமும் இந்த போராட்டத்திற்கு வரவேண்டும் என கோரிக்கை வைக்கிறேன். ஆகையால் அனைத்து வன்னியர்களும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News