ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை பெற வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
- தீர்ப்பளிக்கப்பட்டு 11 மாதங்களுக்கு மேலாகியும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசால் தடை பெற முடியவில்லை.
- கடந்த சில மாதங்களில் மட்டும் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த 15 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளுக்கு முடிவு கட்டுவதற்கான ஒரே தீர்வு சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றத்தில் தடை பெறுவது தான். ஆனால், தீர்ப்பளிக்கப்பட்டு 11 மாதங்களுக்கு மேலாகியும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசால் தடை பெற முடியவில்லை.
கடந்த சில மாதங்களில் மட்டும் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த 15 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்; லட்சக்கணக்கான குடும்பங்கள் சொத்துகளை இழந்து தவிக்கின்றன. இதே நிலை தொடருவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்க்கப் போகிறதா? இந்த விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல் உச்சநீதி மன்றத்தில் ஆன்லைன் சூதாட்டத் தடை தொடர்பான வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வரவும், சரியான காரணங்களை முன்வைத்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை பெறுவதற்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.