தமிழ்நாடு (Tamil Nadu)

ராமஜெயம் கொலைக்கும், ஜெயக்குமார் மரணத்திற்கும் தொடர்பு?

Published On 2024-05-11 07:14 GMT   |   Update On 2024-05-11 07:14 GMT
  • ராமஜெயம் கொலை வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு குழுவினர் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.
  • இருவரது கை-கால்களும் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லை:

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்மச்சாவு தொடர்பாக ஒரு வாரம் ஆகியும் துப்பு துலங்காததால் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை விரிவுபடுத்தி வருகிறார்கள்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

இந்நிலையில் திருச்சியில் கொலை செய்யப்பட்ட ராமஜெயம் கொலைக்கும், ஜெயக்குமார் மரண வழக்கிலும் பல்வேறு ஒற்றுமைகள் இருப்பதாகவும், இதில் ஈடுபட்டவர்ககள் கூலிப்படைகளாக இருக்கலாம் எனவும் ராமஜெயம் கொலை வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு குழுவினர் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் 29-ந் தேதி அமைச்சர் நேருவின் சகோதரரான ராமஜெயம் என்பவர் வாயில் துணி வைக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டார். அதேபோல் ஜெயக்குமார் வாயில் பாத்திரம் கழுவும் பிரஸ் வைக்கப்பட்டுள்ளது. இருவரது கை-கால்களும் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரில் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ள நிலையில், ராமஜெயத்தின் உடலும் கொலை செய்யப்பட்டு சில பாகங்கள் எரிந்து இருந்ததால் அவரும் கொலை செய்யப்பட்டு எரிக்க முயற்சி நடந்திருக்கலாம் என கருதுகிறோம் என்றனர்.

இருவரது மரணத்திலும் கூலிப்படையினர் ஈடுபட்டிருக்கலாம் எனவும், ராமஜெயம் கொலையில் பல ஆண்டுகளாக கொலையாளிகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் ஜெயக்குமார் வழக்கில் குற்றவாளிகள் கண்டறியப்பட்டால் அதன் மூலம் ராமஜெயம் கொலை வழக்கு குற்றவாளிகளை எளிதில் கண்டறியலாம் என அவர்கள் தெரிவித்துள்ளர்.

இதற்கிடையே இறந்தது தனது கணவர் அல்ல என ஜெயக்குமாரின் மனைவி கூறியதால் ஜெயக்குமாரின் எலும்பு மற்றும் சில உடல் பாகங்கள் டி.என்.ஏ. பரிசோதனைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் இன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது.

அதனை பெறுவதற்காக நெல்லை தனிப்படையினர் மதுரை விரைந்துள்ளனர். அந்த அறிக்கையை அவர்கள் இன்று மாலை நெல்லை எஸ்.பி.யிடம் வழங்குவார்கள். அதன் அடிப்படையில் கொலை செய்யப்பட்டது ஜெயக்குமாரா? என்பது உறுதி செய்யப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News