ராமேசுவரம்-மண்டபம் மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்க செல்ல வேண்டாம்- மீனவர் நலத்துறை மீண்டும் எச்சரிக்கை
- ஒவ்வொரு நாளும் துயரத்துடன் கட லுக்கு சென்றுவரும் மீனவர்கள் மீது அக்கறை கொண்டு அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- இலங்கையில் மன்னார், பேசாளை, நெடுந்தீவு உள்ளிட்ட பகுதி மீனவர்களும் தற்போது இலங்கையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம், பாக்ஜலசந்தி கடல் பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் ராமேசுவரம், மண்டபம் பகுதி மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் அடிக்கடி சிறை பிடித்து வருகின்றனர். மேலும் படகுகளை பறிமுதல் செய்வதுடன் மீனவர்களுக்கும் தண்டணை விதித்து வருகின்றனர்.
இதனால் வாழ்வாதாரம் இழந்த ஏராளமான மீனவர்கள் மாற்று தொழிலை நாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மீன்பிடி தொழிலை சார்ந்துள்ள லட்சக்கணக்கானோரும் வேலையிழந்து தவித்து வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் துயரத்துடன் கட லுக்கு சென்றுவரும் மீனவர்கள் மீது அக்கறை கொண்டு அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலுத்து வருகிறது.
மீனவர்கள் சிறை பிடிப்பதை கண்டித்தும், மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ராமேசுவரம், மண்டபம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போன்று இலங்கையில் மன்னார், பேசாளை, நெடுந்தீவு உள்ளிட்ட பகுதி மீனவர்களும் தற்போது இலங்கையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் ராமேசுவரம், மண்டபம் மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடிக்கும் போது தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள் ராமேசுவரம், மண்டபம் மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதன் காரணமாக ராமேசுவரத்தில் சிறிய படகுகள் மட்டுமே மீன்பிடிக்க சென்றுள்ளது. பெரிய படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை என்பது குறிப்பிடதக்கது. இலங்கை கடற்படையை கண்டித்து தமிழக மீனவர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், தற்போது தமிழக மீனவர்களை கண்டித்து இலங்கை மீனவர்கள் போராட்டத்தில் குதித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.