தமிழ்நாடு

சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்களின் கோபம் எதிரொலிக்கும்- சேகர்பாபுவுக்கு உதயகுமார் கண்டனம்

Published On 2024-07-25 08:35 GMT   |   Update On 2024-07-25 08:35 GMT
  • ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் தி.மு.க. அரசு, நாங்கள் செயல்படுத்திய திட்டங்களைத்தான் இன்றும் செயல்படுத்தி வருகிறது.
  • எத்தனை சேகர்பாபுக்கள் வந்தாலும் தமிழக மக்களின் மனதை மாற்ற முடியாது.

சென்னை:

சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சட்டமன்றப் பொதுத்தேர்தலை கருத்திற்கொண்டு, முதலமைச்சர் தேனாம்பேட்டை பகுதியில் உள்ள அம்மா உணவகம் ஒன்றில் ஆய்வு மேற்கொண்டு, தனது எக்ஸ் வலைதளத்தில் அம்மா உணவகங்களை மூடிவிடுவோம் என எதிர்க்கட்சிகள் புரளிகளைக் கிளப்பியதாக முதலைக் கண்ணீர் வடித்துள்ளார்.

தி.மு.க. அரசின் முதலமைச்சருடைய அம்மா உணவகம் பற்றிய எக்ஸ் வலைதள செய்தியைக் கண்டித்து எடப்பாடி பழனிசாமி, கடந்த மூன்றாண்டுகளில் முதலமைச்சரோ, அமைச்சர்களோ, மேயரோ, எவரேனும் நேரில் சென்று அம்மா உணவகங்களை ஆய்வு செய்தனரா என்று கேள்வி எழுப்பி இருந்தார். எடப்பாடி பழனிசாமி அறிக்கையிலே இருந்த உண்மை, முதலமைச்சரையும், அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளையும் உறுத்தியவுடன், ஒருவர் மாற்றி ஒருவர் அறிக்கை விடுகின்றனர்.

எடப்பாடி பழனிசாமியின் ஆணித்தரமான குற்றச்சாட்டுக்களுக்கு முறையாக பதில் சொல்ல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க.வில் இருந்து ஆதாயம் தேடி தி.மு.க.வுக்கு சென்றவர்களை வைத்து அறிக்கை விட வைப்பது வாடிக்கையாகி விட்டது.

முதலமைச்சரின் நடவடிக்கையால், அ.தி.மு.க. காணாமல் போய்விடுமோ என்ற பயம் எடப்பாடி பழனிசாமிக்கு வந்துவிட்டது என்று அமைச்சர் சேகர்பாபு கூறி இருக்கிறார்.

'அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா'' என்ற புரட்சித் தலைவரின் வைர வரிகளை சிரமேற்கொண்டு, அரசியலில் வீரநடை போடுபவர் எங்கள் எடப்பாடி பழனிசாமி. தொடர்ந்து வீண்வம்பு வளர்த்தால், அவர்கள் பாணியிலேயே எசப்பாட்டு பாட எங்களுக்கும் தெரியும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

எத்தனை சேகர்பாபுக்கள் வந்தாலும் தமிழக மக்களின் மனதை மாற்ற முடியாது. வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்களின் கோபம் எதிரொலிக்கும். ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் தி.மு.க. அரசு, நாங்கள் செயல்படுத்திய திட்டங்களைத்தான் இன்றும் செயல்படுத்தி வருகிறது என்பதற்கு இந்த அம்மா உணவகம் ஒன்றே 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்பதைக் கூறி, இனியாவது உங்கள் மூளையில் உதித்த நல்ல வளர்ச்சித் திட்டங்களை தமிழக மக்களுக்குத் தாருங்கள், வேலை வாய்ப்பை உருவாக்குங்கள் என்று தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News