தமிழ்நாடு

முல்லைப்பெரியாறில் தவறி விழுந்த யானை மீட்பு

Published On 2024-07-10 09:41 GMT   |   Update On 2024-07-10 09:41 GMT
  • தண்ணீர் குடிப்பதற்காக ஷட்டர் அருகே வந்த போது தவறி உள்ளே விழுந்தது.
  • யானை வனப்பகுதிக்குள் அனுப்பி வைக்கப்பட்டது.

கூடலூர்:

தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள தேக்கடி வனப்பகுதியை ஒட்டி ஏராளமான யானை, மான்கள் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. இவை அடிக்கடி தண்ணீர் தேடி அணைப்பகுதியை ஒட்டி நடமாடி வருகின்றன.

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் ஷட்டர் பகுதியில் இன்று காலை ஒரு யானை நடமாடியது. திடீரென தண்ணீர் குடிப்பதற்காக ஷட்டர் அருகே வந்த போது தவறி உள்ளே விழுந்தது.

பின்னர் அந்த யானை மேலே எழ முடியாமல் சத்தம் போட்டது. உடனே தமிழக பொதுப்பணித்துறையினர் அங்கு சென்று பார்த்தனர். யானையை மீட்பதற்கு கேரள வனத்துறைக்கு மட்டுமே அனுமதி உள்ளது என்பதால் இது குறித்து பெரியாறு புலிகள் சரணாலய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

தற்போது முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்காக 1200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. யானை ஷட்டர் பகுதியில் விழுந்ததால் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் முழுவதும் நிறுத்தப்பட்டது.

இதனையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் யானையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து 1 மணி நேர போராட்டத்துக்கு பின்பு யானை மேலே கொண்டு வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து யானை வனப்பகுதிக்குள் அனுப்பி வைக்கப்பட்டது.

யானை மற்றும் வன விலங்குகள் நடமாடும் பகுதியில் தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News