தமிழ்நாடு

வெப்ப அலையால் பக்கவாதம் ஏற்பட வாய்ப்பு: பொதுமக்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Published On 2024-04-23 05:42 GMT   |   Update On 2024-04-23 05:42 GMT
  • இயல்பைவிட 5,6 செல்சியசுக்கு மேல் அதிகமாக வெப்பம் தாக்கினால் சிவப்பு எச்சரிக்கை கொடுக்கப்படும்.
  • வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்களுக்கு வெப்ப பக்கவாதம் (ஸ்டோக்) ஏற்படக்கூடும்.

சென்னை:

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் மார்ச் மாதத்திலேயே தொடங்கிவிட்டது. வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் வெயில் தாக்கம் தொடங்கி மே மாதத்தில் அக்னி நட்சத்திரத்தின் போது வெயிலின் உக்கிரம் உச்சத்தை அடையும்.

ஆனால் இந்த வருடம் கோடை வெயில் முன் கூட்டியே தாக்கி வருவதால் பொதுமக்கள் வாடி வதங்கி வருகின்றனர். பருவகால மாற்றத்தால் சுட்டெரிக்கும் வெயில் கொளுத்தி வருகிறது.

தமிழகத்தின் வட உள்மாவட்டங்களில் இயல்பைவிட 3,4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்து உள்ளது. இதனால் மக்கள் வெளியில் நடமாட முடியவில்லை.

தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 109 டிகிரி வெயில் தாக்கி உள்ளது. சேலத்தில் 107, தர்மபுரி 106 டிகிரி வெயில் கொளுத்தியது.

ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் இருந்தே வெப்ப அலை வீசி வருவதால் மக்கள் பகலில் மட்டுமின்றி இரவு நேரத்திலும் உஷ்ணத்தில் அவதிப்படுகிறார்கள்.

14 மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் தாக்கி வருகிறது. வெயில் தாக்கத்தால் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். சிறுவர்கள், முதியவர்கள் வெயிலில் செல்வதை தவிர்த்து வருகின்றனர்.

வெயிலின் தாக்கம் ஜூன் மாதம் வரை இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். தமிழகம் மட்டுமின்றி பிற மாவட்டங்களிலும் வெயில் அதிகமாக இருப்பதால் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பகலில் வெளியே வரவேண்டாம் என அம்மாநில அரசுகள் அறிவித்துள்ளன. வெயிலின் கோர தாண்டவத்தை தாங்க முடியாமல் உயிர் இழப்பும் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொது மக்கள் கோடை வெயில் தாக்கத்தால் பாதிக்கக்கூடாது என்பதற்காக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வெப்ப ஸ்டோக், மயக்கம், சோர்வு ஏற்படுவோருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறை முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

தமிழகத்தில் வழக்கத்திற்கு மாறாக வெப்பதாக்குதல் அதிகரித்து வருவதால் சென்னை வானிலை மையமும் பொதுமக்களுக்கு அவ்வப்போது முன்னெச்சரிக்கை செய்து பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தி வருகின்றது.


இதுகுறித்து வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது:-

வெப்ப அலை என்பது புதிதல்ல. ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் ஏற்படக் கூடியவைதான். சராசரி வெப்ப அளவைவிட கூடுதலாக 4,5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் போது வெப்ப அலை என்கிறோம். காற்றின் ஈரப்பதம் அதிகரிப்பதால் அதாவது 50 சதவீதத்திற்கு மேல் அதிகரித்தால் உடலில் இருந்து வியர்வை ஆவியாக மாறாது. ஆவியாக மாறாமல் போகும் போது உடலில் சூடு ஏற்படும். பல பிரச்சினைகள் வரும்.

தலைவலி, மயக்கம், சோர்வு போன்றவை ஏற்படக் கூடும். வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்களுக்கு வெப்ப பக்கவாதம் (ஸ்டோக்) ஏற்படக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி கடலோர பகுதிகளை ஒட் டிய மாவட்டங்களில் காற்றின் ஈரப்பதம் அதிகரிப்பதால் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

அதே நேரத்தில் கடல் காற்று உள்ளே வரும் போது வெப்ப நிலை குறையும். பொதுமக்கள் காலை 11 மணி முதல் பகல் 3 மணி வரை வெயிலில் செல்லாமல் தவிர்ப்பது நல்லது. இதனால் வயல் வெளியில் வேலை செய்பவர்கள் கூலித் தொழிலாளர்கள், மூட்டைத் தூக்குபவர்கள் பாதிக்கக்கூடும். ஓட்டப் பயிற்சி, உடல் பயிற்சி செய்பவர்கள் கூட கவனமாக அதில் ஈடுபட வேண்டும்.

வெப்ப அலையை மஞ்சள் அலர்ட் மூலம் எச்சரிக்கப்படுகிறது. இயல்பைவிட 5,6 செல்சியசுக்கு மேல் அதிகமாக வெப்பம் தாக்கினால் சிவப்பு எச்சரிக்கை கொடுக்கப்படும். தமிழகத்தில் அது போன்ற நிலை இல்லை.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

Similar News