தமிழ்நாடு

ரூ.100 கோடி நிலம் மோசடி வழக்கு: எம்.ஆர்.விஜயபாஸ்கர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்

Published On 2024-07-19 07:19 GMT   |   Update On 2024-07-19 07:19 GMT
  • எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்பட 13 பேர் மீது வாங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
  • விஜயபாஸ்கர் ஆஜர்படுத்தப்படுவதை அறிந்த அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் கோர்ட்டு முன்பு திரண்டார்கள்.

கரூர்:

கரூரில் ரூ. 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரிப்பு செய்ததாக முன்னாள் அமைச்சர் மற்றும் கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் ஆதரவாளர்களான செல்வராஜ், பிரவீன் உள்பட 7 பேர் மீது கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர் புகார் அளித்தார். இந்த வழக்கில் தனது பெயரும் சேர்க்கப்படலாம் என கருதிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கரூர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு 2 முறை தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதற்கிடையே இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து கரூர் வாங்கலை சேர்ந்த பிரகாஷ் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அவரது சகோதரர் சேகர் மற்றும் பிரவீன் உள்பட 13 பேர் தன்னை மிரட்டி அந்த ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்து விட்டதாக புகார் அளித்தார். இதில் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்பட 13 பேர் மீது வாங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதை அறிந்து எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமறைவானார். பின்னர் ஒரு மாத கால தேடுதல் வேட்டைக்கு பிறகு கேரள மாநிலம் திருச்சூரில் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர் பிரவீன் ஆகியோரை கைது செய்து கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். அதன்பின்னர் ஆவணங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என போலியான நான் டிரேசபிள் சான்றிதழ் வழங்கிய வில்லிவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரிதிவிராஜ் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று மேலும் ஒரு வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டார். பிரகாஷ் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட கொலை மிரட்டல், நில அபகரிப்பு உள்ளிட்ட வழக்குகளில் சம்பிரதாய கைது (பார்மல்) நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கான உத்தரவை திருச்சி மத்திய ஜெயில் அடைக்கப்பட்டுள்ள எம்.ஆர். விஜயபாஸ்கரிடம் போலீசார் வழங்கினர்.

இந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தினர். இதற்காக கரூர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் திருச்சி சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அவரை அழைத்து வந்தனர்.

விஜயபாஸ்கர் ஆஜர்படுத்தப்படுவதை அறிந்த அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் கோர்ட்டு முன்பு திரண்டார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது.

Tags:    

Similar News