ரூ.876 கோடி செலவில் அமைக்கப்படுகிறது: வல்லூர் அனல்மின் நிலையத்தில் மாசுவை வெளியேற்ற புதிய வசதி
- அனல்மின் நிலையம் 500 மெகவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 3 அலகுகளை கொண்டுள்ளது.
- சல்பர் டை ஆக்சைடு வெளியேற்றும் விதிமுறைகளுக்கு இணங்க இந்த வசதிகள் நிறுவப்படுகின்றன.
மீஞ்சூர் அருகேயுள்ள அத்திப்பட்டு புது நகரில் வல்லூர் அனல் மின் நிலையம் அமைந்துள்ளது. இந்த அனல்மின் நிலையம் தேசிய அனல் மின் நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. மேலும் இது தேசிய அனல் மின் நிலையம் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கூட்டு முயற்சியாகும். இந்த அனல் மின் நிலையம் 500 மெகவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 3 அலகுகளை கொண்டுள்ளது.
இந்நிலையில் வல்லூர் அனல்மின் நிலையத்தில் ரூ.876 கோடி செலவில் மாசு கட்டுப்பாட்டு வசதிகள் அமைக்கப்பட உள்ளது. இதற்கு மத்திய மின்சார ஒழுங்கு முறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. அனல் மின் நிலையங்களில் சல்பர் டை ஆக்சைடு வெளியேற்றும் விதிமுறைகளுக்கு இணங்க இந்த வசதிகள் நிறுவப்படுகின்றன.
தேசிய தலைநகர் அல்லது 10 லட்சம் மக்கள் தொகை கொண்ட நகரங்களில் 10 கி.மீ. சுற்றளவில் அமைந்துள்ள அனல்மின் நிலையங்கள் சல்பர் டை ஆக்சைடு வெளியேற்றும் விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல் கடந்த 2022-ம் ஆண்டு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி வல்லூர் அனல் மின் நிலையத்தில் இந்த வசதி ஏற்படுத்தப்படுகிறது.
இந்த அனல் மின் நிலையம் கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது. இங்கு கூடுதலாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் கூடுதல் கட்டுமான பணிகளை கருத்தில் கொண்டு செலவு தொகை சற்று அதிகமாக உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.