மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த 'தீபாவளி பரிசு பெட்டகம்' விற்பனை தொடங்கியது
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இனிப்பு மற்றும் கார வகை திண்பண்டங்கள் அடங்கிய பெட்டகம்.
- தீபாவளி பரிசு பெட்டகம் விற்பனை வருகிற 23-ந்தேதி வரை நடை பெறுகிறது.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்கள் விழாக் காலங்களுக்கு ஏற்ற வகையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
அதன்படி, வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இனிப்பு மற்றும் கார வகை திண்பண்டங்கள் அடங்கிய 'மதி தீபாவளி பரிசு பெட்டகம்' தற்போது விற்பனை செய்யப்படுகிறது.
இந்த பரிசு பெட்டகத்தில் சிவப்பு அரிசி, கம்பு, சோளம், ராகி, தினை, கருப்புக் கவுனி, கருப்பு உளுந்து, நரிப்பயிர், சாமை, ஆவாரம் பூ ஆகியவற்றால் செய்யப்பட்ட லட்டு வகைகள், சாமை முறுக்கு, தேங்காய் பால் முறுக்கு, அரிசி முறுக்கு, கை முறுக்கு ஆகிய கார வகைகளும் இடம் பெற்றுள்ளன.
இத்துடன் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள், தஞ்சாவூர் ஓவியங்கள், மண்ணால் செய்யப்பட்ட விளக்குகள், கோரைப் புல்லில் செய்யப்பட்ட அலங்காரப் பரிசு பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன.
பொதுமக்கள் இவற்றை மொத்தமாகவோ அல்லது சிறிய அளவிலோ விரும்பும் வகையில் www.tncdw.org என்ற இணையதளம் மற்றும் 76038 99270 என்ற செல்போன் எண் வாயிலாக முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். மொத்த விற்பனைக்கு சலுகைகளும் வழங்கப்படுகிறது.
இந்த விற்பனை வருகிற 23-ந்தேதி வரை நடை பெறுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.