தமிழ்நாடு

சத்துணவு முட்டைகள் விற்பனை- துறையூர் சத்துணவு அமைப்பாளர் கைது

Published On 2024-09-19 07:51 GMT   |   Update On 2024-09-19 07:51 GMT
  • தனியார் ஓட்டலில் தமிழக அரசின் சார்பில் அங்கன்வாடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் முட்டைகள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.
  • ஓட்டலில் அதிரடி சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் பிரதீப்குமார் உத்தரவிட்டார்.

துறையூர்:

தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பகுதியிலும் அங்கன்வாடி மையங்கள் அமைக்கப்பட்டு, அப்பகுதி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அளித்தல், முன்பருவ கல்வி, சுகாதாரம், தன் சுத்தம், வளர் இளம் பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து அளித்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் மதிய உணவு திட்டம் மற்றும் அங்கன்வாடி மையத்திற்கு வரும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் வகையில் மதிய உணவு உடன் இலவசமாக முட்டையும் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே திருச்சி மாவட்டம் துறையூரில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் அமைந்துள்ள தனியார் ஓட்டலில் தமிழக அரசின் சார்பில் அங்கன்வாடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் முட்டைகள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.

இந்த முட்டைகளை அங்கன்வாடி மைய பணியாளர்களிடம் இருந்து சட்டவிரோதமாக குறைந்த விலைக்கு வாங்கி பயன்படுத்தி உள்ளனர். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை செய்து முட்டைகளை தனியார் ஓட்டலுக்கு விற்பனை செய்த அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஓட்டல் நிர்வாகம் ஆகியோர் மீது காவல்துறை மூலம் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த விவரம் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமாருக்கு தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த ஓட்டலில் அதிரடி சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் பிரதீப்குமார் உத்தரவிட்டார்.

இதையடுத்து அதிகாரிகள் இன்று காலை அந்த ஓட்டலில் சோதனை நடத்தினர். பின்னர் தாசில்தார் மோகன் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அந்த ஓட்டலுக்கு சீல் வைத்தனர். மேலும் துறையூர் தனியார் ஓட்டலில் அரசின் இலவச முட்டைகள் விற்கப்பட்டது தொடர்பாக அதிகாரிகள் குழுவினர் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் துறையூர் அருகே உள்ள மதுராபுரி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் இருந்து இந்த முட்டைகள் ஓட்டலுக்கு விற்கப்பட்டது தெரியவந்தது. அந்த பள்ளியின் சத்துணவு அமைப்பாளர் வசந்தகுமாரி(58) என்பவர் ஓட்டல் உரிமையாளர் ரத்தினம்(46) என்பவரிடம் முட்டைகளை விற்றுள்ளார்.

இதை தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் நிஜாஸ்தீன் ஜோ துறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சத்துணவு அமைப்பாளர் வசந்தகுமாரி, ஓட்டல் உரிமையாளர் ரத்தினம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த சம்பவத்தின் பின்னணியில் யார்? யார் உள்ளனர்? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிவில் இதில் வேறு யாருக்கும் தொடர்பு இருந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில், தமிழக அரசின் முக்கிய திட்டங்களில் ஒன்றான 'ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில்' இதுபோன்ற முறைகேடுகள் இனிவரும் காலங்களில் நடைபெறாத வண்ணம் தமிழக அரசு அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு ஆதார் அடிப்படையிலான வருகையினை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News