தமிழ்நாடு

வன விலங்குகளை வேட்டையாட வைத்த வலையில் சிக்கிய சிறுத்தை: வனத்துறையினர் மீட்டு வனப்பகுதியில் விட்டனர்

Published On 2023-11-26 07:25 GMT   |   Update On 2023-11-26 07:25 GMT
  • கம்பியில் சிக்கி மீட்கப்பட்டிருக்கும் சிறுத்தை ஆண் சிறுத்தை என்பதும் வயது சுமார் 5 இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவி்க்கின்றனர்.
  • இரும்பு வலை வைத்தவர்கள் யார் என்பது குறித்து பாலக்கோடு வனத்துறைனர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாலக்கோடு:

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே கணவனஅள்ளி கிராமத்தை யொட்டியுள்ள கரடு பகுதியில் வித்தியாசமான உறுமல் சத்தம் வந்து கொண்டிருக்கவே சத்தம் வந்த இடத்திற்கு கிராம மக்கள் சென்று பார்த்துள்ளனர்.

அங்கு சிறுத்தை ஒன்றின் கழுத்தில் இரும்பு கம்பி இறுக்கிய நிலையில் உயிருக்கு போரடியபடி உறுமிக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்,

இதனை அடுத்து பாலக்கோடு வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் வன விலங்குகளுக்கு மயக்க ஊசி செலுத்தும் மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்துபட்டது,

சிறுத்தை மயங்கியதும் கழுத்தை இறுக்கியிருந்த இரும்பு கம்பி அகற்றபட்டு காயங்களுக்கு மருந்துகள் தடவி விட்ட பின்னர் கூண்டு ஒன்றில் சிறுத்தையை அடைத்து இரவோடு இரவாக ஒகேனக்கல் சின்னாறு வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர்.

இறைச்சிக்காக மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடும் நபர்கள் வைத்த இரும்பு கம்பி வலையில் எதிர்பாராத விதமாக சிறுத்தை சிக்கியிருக்கிறது என்பது தெரிய வந்திருக்கிறது.

கம்பியில் சிக்கி மீட்கப்பட்டிருக்கும் சிறுத்தை ஆண் சிறுத்தை என்பதும் வயது சுமார் 5 இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவி்க்கின்றனர்.

வன விலங்குகளை வேட்டையாட இரும்பு வலை வைத்தவர்கள் யார் என்பது குறித்து பாலக்கோடு வனத்துறைனர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News