வெள்ளத்தடுப்பு பணிக்கு மணல் மூட்டைகள் தயார்- கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
- கால்வாயில் மழைநீர் சீராக செல்வதற்கு கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.
- தொடர்ந்து தேனாம்பாக்கம் பகுதியில் உள்ள மழை வடிநீர் கால்வாயை கலெக்டர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
காஞ்சிபுரம்:
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மழை வடிநீர் கால்வாய்களை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். காஞ்சிபுரம் மேட்டுத் தெரு சந்திப்பில் அவர் பார்வையிட்டு, மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும் சந்தைவெளி அம்மன் கோயில் அருகே உள்ள மழை வடிநீர் கால்வாயை பார்வையிட்டு, கால்வாயில் மழைநீர் சீராக செல்வதற்கு கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். காஞ்சிபுரம் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தை பார்வையிட்டு, மழை காலங்களில் மழை வெள்ளத் தடுப்புப் பணிக்காக வைக்கப்பட்டுள்ள மணல் மூட்டைகளை பார்வையிட்டு, சாலை பயன்பாட்டாளர்களுக்கு உதவிடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தகவல் வாகனத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்பு ஒலிமுகமதுபேட்டை சந்திப்பில் மழைநீர் தேங்காமல் இருக்க சிறு பாலம் அமைக்க அறிவுறுத்தினார். தொடர்ந்து தேனாம்பாக்கம் பகுதியில் உள்ள மழை வடிநீர் கால்வாயை கலெக்டர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையாளர் செந்தில் முருகன், நெடுஞ்சாலைத் துறை உதவி செயற்பொறியாளர் பெரியண்ணன், மாநகராட்சி பொறியாளர் கணேசன் மற்றும் மாநகராட்சி நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.