தமிழ்நாடு

சனி பிரதோஷத்தை முன்னிட்டு மலையடிவார நுழைவு வாயிலில் திரண்டிருந்த பக்தர்கள் கூட்டம்.

சனி பிரதோஷம்- சதுரகிரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

Published On 2024-08-31 04:42 GMT   |   Update On 2024-08-31 04:42 GMT
  • பல்வேறு மாவட்டங்களில் இருந்து பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையடி வாரத்தில் குவிந்தனர்.
  • 10 வயதுக்கு குறைவானவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மலையேற தடைவிதிக்கப்பட்டிருந்தது.

வத்திராயிருப்பு:

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் தலா 4 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு இன்று முதல் வருகிற 3-ந் தேதி வரை பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. முதல்நாளான இன்று சனி பிரதோஷத்தை முன்னிட்டு அதிகாலை முதல் மதுரை, விருதுநகர், திருச்சி, சிவகங்கை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையடி வாரத்தில் குவிந்தனர்.

இன்று காலை 6.20 மணிக்கு வனத்துறையினர் நுழைவுவாயில் திறந்து விட்டனர். அதனை தொடர்ந்து உடைமைகள் சோதனை செய்யப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். சிறுவர்கள் முதல் இளைஞர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் ஆர்வத்துடன் மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.

 

மலை பாதையில் உள்ள வழுக்குப்பாறையில் பக்தர்கள் குளித்தனர்.

மலைப்பாதையில் உள்ள வழுக்குப்பாறையில் சிறிதளவு தண்ணீர் சென்றது. அதில் சில பக்தர்கள் குளித்துவிட்டு மலையேறி சென்றனர். நடக்க முடியாத வயதான வர்கள் டோலி மூலம் சுமை தூக்கும் தொழிலாளிகள் சுமந்து சென்று சாமி தரிசனம் செய்ய வைத்தனர்.

இன்று சனி பிரதோஷத்தை முன்னிட்டு மாலையில் சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்கம் சாமி பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி செயல் அலுவலர் ராம கிருஷ்ணன் ஆகியோர் செய்துள்ளனர்.

10 வயதுக்கு குறைவானவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மலையேற தடைவிதிக்கப்பட்டிருந்தது. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்லக்கூடாது. இரவில் மலை கோவிலில் தங்க அனுமதியில்லை போன்ற கட்டுப்பாடுகளை வனத்துறையினர் விதித்திருந்தனர்.

சதுரகிரி மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை பெய்தால் பக்தர்களுக்கான அனுமதி ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Tags:    

Similar News