வங்கியில் கடன் பெற்று திரும்ப செலுத்தாத தனியார் பொறியியல் கல்லூரிக்கு சீல் வைப்பு
- கல்லூரியில் சேர்ந்து விடுதியில் தங்கி இருந்த மாணவர்களை வெளியேற்றப்பட்டனர்.
- மகாலட்சுமி தலைமையில் 40-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
பென்னாகரம்:
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே நல்லூர் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வந்தது. இந்த கல்லூரியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த கல்லூரி நிர்வாகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார் வங்கியில் கடன் பெற்றுள்ள நிலையில் திரும்பி செலுத்தாததால் நீதிமன்றத்தில் தனியார் வங்கியின் தரப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின் படி தனியார் வங்கி அலுவலர்கள், பென்னாகரம் வட்டாட்சியர் சவுகத் அலி தலைமையிலான வருவாய்த்துறையினர் அடங்கிய குழுவினர் நேற்றுமாலை நிர்வாக அலுவலகம், கல்லூரி வகுப்பறைகள், உணவகம், ஆய்வகம், நூலகம், தங்கும் விடுதிகள் உள்ளிட்டவைகளுக்கு சீல் வைத்தனர்.
மேலும் இந்த ஆண்டில் கல்லூரியில் சேர்ந்து விடுதியில் தங்கி இருந்த மாணவர்களை வெளியேற்றப்பட்டனர். கல்லூரியில் மூன்றாம் ஆண்டு, நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் மாற்றாக தருமபுரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் தேர்வு எழுத அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியுள்ளதாக மாணவர்களிடம் வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.
மேலும் கல்லூரி பகுதிகளில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளர் மகாலட்சுமி தலைமையில் 40-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.