'மதச்சார்பின்மை' இந்தியாவுக்கு தேவையில்லாத ஒன்று .. ஆளுநர் ரவி கருத்துக்கு வலுக்கும் கண்டனம்
- இந்தியா தனது தர்மத்தில் இருந்து எப்படி விலக முடியம். எனவே மதச்சார்பின்மை என்பது இந்தியாவுக்கு தேவையே இல்லை என்று தெரிவித்துள்ளார்.
- தேவாலயத்துக்கும் அரசனுக்கும் இடையில் சண்டை ஏற்பட்டபோது உருவாக்கப்பட்ட தத்துவமே மதச்சார்பின்மை ஆகும்
தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி கூறி வரும் கருத்துக்கள் தொடர்ந்து சர்ச்சையாகிவரும் நிலையில் தற்போது இந்திய அரசியலமைப்பில் பிரதானமான மதச்சார்பின்மையே தேவையற்றது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
நேற்றைய தினம் கன்னியகுமாரி மாவட்டம் திருவட்டாரில் நடைபெற்ற வித்யாபூஷன் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, நாட்டு மக்களுக்கு எதிராக பல்வேறு ஏமாற்று வேலைகள் நடக்கிறது. அதில் ஒன்று மதச்சார்பின்மை [secularism] குறித்த தவறான புரிதல்.மதச்சார்பின்மைக்கு என்ன அர்த்தம் உள்ளது, அது ஒரு ஐரோப்பிய தத்துவம், அங்கு தேவாலயத்துக்கும் அரசனுக்கும் இடையில் சண்டை ஏற்பட்டபோது உருவாக்கப்பட்ட தத்துவமே மதச்சார்பின்மை, இந்தியா தனது தர்மத்தில் இருந்து எப்படி விலக முடியம். எனவே மதச்சார்பின்மை என்பது இந்தியாவுக்கு தேவையே இல்லை. அது அரசியலமைப்பில் இடைச் செறுகளாகி வந்த ஒன்று, நமக்கு யாரும் அதை சொல்லித் தர வேண்டியதில்லை என்று தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பில் மதச்சார்பின்மை என்ற பதம் இருக்கும்போதே நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில் அதை ஆளுநர் கூறுவதுபோல் கைவிட்டால் நாட்டில் அமைதியின்மை ஏற்படும் என்று ஆளுநரின் கருத்துக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது கண்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.