தமிழ்நாடு

தமிழக அரசு கல்வி, வேலைவாய்ப்பு குறித்து சிந்திக்க மறுக்கிறது- சீமான் குற்றச்சாட்டு

Published On 2024-07-03 04:46 GMT   |   Update On 2024-07-03 04:46 GMT
  • கல்வியை மாநில பட்டியலில் இருந்து மத்திய அரசு, பொது பட்டியலுக்கு எடுத்துச் சென்றது.
  • தமிழகத்தில் சாராயத்தின் விலை மட்டும் குறைந்துள்ளது.

விழுப்புரம்:

விக்கிரவாண்டி சட்டமன்றதொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயாவை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கெடார் கிராமத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

கல்வியை மாநில பட்டியலில் இருந்து மத்திய அரசு, பொது பட்டியலுக்கு எடுத்துச் சென்றது. அப்போது கல்வி மாநில உரிமையை பறிகொடுத்தவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்த தி.மு.க.தான். இதை மறந்துவிடுவது மக்களின் இயல்பு. நினைவுப்படுத்திக் கொண்டே இருப்பது போராளிகளின் கடமை. இதைத்தான் நாங்கள் செய்து கொண்டுள்ளோம்.

இன்றைக்கு கல்வியை மாநில பட்டியலில் கொண்டு வருவோம் என தேர்தல் அறிக்கை விடுக்கின்றனர். எடுத்துக்கொண்டு போகும்போது என்ன செய்தீர்கள்? உங்களால் தடுக்க முடியவில்லை. பள்ளிக்கூடங்கள், பலரை உருவாக்கியுள்ளது. ஆனால் நல்ல ஒரு அரசியல்வாதியை உருவாக்க முடியவில்லை.

ஒரு மாநில கட்சி, ஒன்றிய அரசுடன் 18 ஆண்டுகள் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்ற ஒரே கட்சி தி.மு.க.தான். அன்றெல்லாம் இவர்கள் கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வருவதற்காக என்ன போராட்டம் செய்தார்கள்?

தமிழில் வழக்காடு மொழிகள் வேண்டும் என பல போராட்டங்களை தி.மு.க.வினர் நடத்தினார்கள். இவர்கள் நினைத்திருந்தால் எனது தாய்மொழியில் வழக்காடும் மொழி வேண்டும் என கேட்டிருந்தால், அதை பெற்றிருக்கலாம். ஆனால் இவர்கள் அதனை செய்யவில்லை. எந்த இடத்திலுமே இவர்கள் சரியாக நின்றது கிடையாது.

தமிழகத்தில் சாராயத்தின் விலை மட்டும் குறைந்துள்ளது. இளைஞர்களின் கல்வி, வேலை வாய்ப்பை பற்றி சிந்திக்காத அரசு, 45 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனையாகிற மதுவை 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனைசெய்ய என்ன வழி என சிந்தித்து கொண்டுள்ளது. நாடு எதை நோக்கிச்சென்று கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News