தவசி படத்துக்கு வசனம் யார்? - சீமான் பேட்டியால் சர்ச்சை
- தே.மு.தி.க. தலைவர் உடலுக்கு தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்
- 2001ல் வெளிவந்த "தவசி" படத்திற்கு உரையாடல் எழுதினேன் என சீமான் கூறினார்
தே.மு.தி.க. கட்சியின் தலைவர், பிரபல நடிகர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் நேற்று காலை காலமானார்.
ரசிகர்கள் அஞ்சலி செலுத்த பெருந்திரளாக குவிந்து வருவதால் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடல், சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது.
மறைந்த விஜயகாந்தின் உடலுக்கு பல அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப்பட பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த தூத்துக்குடியிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "விஜயகாந்த் என்றால் துணிவுதான். அவருடைய தவசி படத்துக்கு நான் உரையாடல் எழுதினேன். அப்போதுதான் அவரிடம் பழகும் வாய்ப்பு கிடைத்தது" என தெரிவித்தார்.
இதையடுத்து, 2001ல் வெளியான "தவசி" திரைப்படத்திற்கு படத்தின் இயக்குநர் உதயசங்கர் தான் வசனம் எழுதினார் என்பதை படம் எடுத்து வெளியிட்டு சமூக வலைதளத்தில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
அதில் "வசனம் - சீமான்" என அத்திரைப்படத்தில் எங்குமே இல்லாததை சுட்டி காட்டும் விமர்சகர்கள், 2023 ஜனவரி மாதம் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டசபை உறுப்பினர் திருமகன் காலமான போதும், இரங்கல் தெரிவிக்கும் போது, "நாம் தமிழர் கட்சியில் சேர திருமகன் விரும்பினார்" என சீமான் சர்ச்சையை கிளப்பியதை குறிப்பிடுகின்றனர்.
இரங்கல் தெரிவிக்கும் செய்தியில் சர்ச்சையை கிளப்புவது சீமானுக்கு வாடிக்கையாகி உள்ளதாக நடுநிலையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.