தமிழ்நாடு

மெரினாவில் பேனா சின்னம் அமைப்பதை மறு பரிசீலனை செய்ய வேண்டும்- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

Published On 2023-04-30 07:31 GMT   |   Update On 2023-04-30 07:31 GMT
  • உலகப் பிரசித்தி பெற்ற மெரினா கடற்கரையை அழிக்க கூடிய வகையில் இந்த அரசு பேனா நினைவுச் சின்னத்தை அமைக்கிறது.
  • மக்கள் வருகிற பாராளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு தக்க பாடம் புகட்டுவார்கள்.

சென்னை:

வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சென்னை ஓட்டேரியில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பேனா நினைவு சின்னம் அமைப்பதால் மீன் உற்பத்தி பாதிக்கப்படும். மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

உலகப் பிரசித்தி பெற்ற மெரினா கடற்கரையை அழிக்க கூடிய வகையில் இந்த அரசு பேனா நினைவுச் சின்னத்தை அமைக்கிறது.

மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மக்களுக்கு பயன்படாத பேனா நினைவுச் சின்னம் அமைப்பதை மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகமும் தானும் மத்திய அரசிடம் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து இருந்தோம்.

நினைவுச் சின்னம் அமைப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

மெரினா கடற்கரை என்றாலே படகுகள், கட்டு மரங்கள், வலைகள் இருப்பதுதான் அழகு. எதிர் காலத்தில் மெரினா கடற்கரை பெயரை அடித்து விட்டு பேனா கடற்கரை என பெயர் மாறிவிடும்.

தமிழகத்தில் கொலை. கொள்ளை கற்பழிப்பு பாலியல் பலாத்காரம் அதிகரித்து வருகிறது. நில அபகரிப்பு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர் செங்கல்பட்டு மாவட்டத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளார் நீதிமன்றத்திற்கு சென்றவருக்கு இந்த நிலை என்றால் பொது மக்களுக்கு எந்த நிலை ஏற்படும்?

திருநெல்வேலி கிராம நிர்வாக அலுவலர் கொலை வழக்கை வெளிப்படை தன்மையுடனும் நேர்மையுடனும் விசாரிக்க வேண்டும் இந்த கொலையில் யார் சம்பந்தப்பட்டாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் தற்போது அசாதாரண சூழ்நிலை இருந்து வருகிறது. மக்கள் வருகிற பாராளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு தக்க பாடம் புகட்டுவார்கள்.

பட்டன் தட்டினால் மதுபானம் வருவது தான் தி.மு.க. அரசின் சாதனையாக உள்ளது.

அதிமுக மற்றும் பாஜக தோழமைக் கட்சிகள் உள்ளன. ஆனால் பாஜக பொருளாளராக இருக்கக்கூடிய சேகர் என்பவர் அதிமுக குறித்து அவதூறான விமர்சனத்தை தெரிவித்துள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர் பேசியது தவறு என தெரிவிக்க வேண்டும். எங்களுக்கும் அது போன்ற விமர்சனங்கள் வைக்கத் தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News