தமிழ்நாடு

பாஞ்சாங்குளத்தில் போலீசார் விசாரணை நடத்திய காட்சி - பெட்டிக்கடைக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்த காட்சி.

பட்டியலின மாணவர்களுக்கு தின்பண்டம் வழங்க மறுத்த பெட்டிக்கடைக்கு சீல் வைப்பு

Published On 2022-09-17 08:59 GMT   |   Update On 2022-09-17 08:59 GMT
  • மகேஷ்வரன் வைத்துள்ள பெட்டிக்கடையில் சமீபத்தில் பட்டியலினத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் சிலர் தின்பண்டங்கள் வாங்க வந்துள்ளனர்.
  • பொருட்கள் தரமாட்டேன். ஊர் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என்று மாணவர்களிடம் மகேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்த நல்லூரை அடுத்த பாஞ்சாங்குளம் கிராமத்தில் குறைந்த அளவில் பட்டியலின சமுதாயத்தினர் வசித்து வருகின்றனர்.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஒரு திருமண விழாவில் பட்டியலினத்தவர்களுக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. இதுதொடர்பாக ஒரு தரப்பினர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மற்றொரு தரப்பினர் மீது அடிதடி வழக்கு பதிவானது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 2 தரப்பினரும் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சுந்தரையா என்பவரது மகன் மகேஷ்வரன் ஊர் நாட்டாமையாக செயல்பட்டதாகவும், அப்போது மற்றொரு தரப்பை சேர்ந்த ரூபன் என்பவருடன் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானதாகவும் கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து பட்டியலின சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு மற்றொரு தரப்பினர் வைத்துள்ள கடைகளில் இருந்து பொருட்கள் வழங்கக்கூடாது என்று அவர்களுக்குள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மகேஷ்வரன் வைத்துள்ள பெட்டிக்கடையில் சமீபத்தில் பட்டியலினத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் சிலர் தின்பண்டங்கள் வாங்க வந்துள்ளனர். அவர்களிடம் பொருட்கள் தரமாட்டேன். ஊர் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என்று மகேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

உடனே அந்த குழந்தைகளும் அப்பாவித்தனமாக கட்டுப்பாடா? அப்படி என்றால் என்ன? என்று கேட்டுள்ளனர். இந்த சம்பவங்களை மகேஷ்வரனும், அவரது நண்பரான ராமச்சந்திர மூர்த்தியும் சேர்ந்து வீடியோ பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வீடியோவை தங்கள் சமுதாய வாட்ஸ்-அப் குரூப்பில் போட்டுள்ளனர். அந்த வீடியோ பரவி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜிக்கு அனுப்பினர்.

அவரது உத்தரவின்பேரில் சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுதிர் விசாரணை நடத்தினார். அதன்பேரில் கரிவலம்வந்த நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். உடனே பாஞ்சாங்குளத்திற்கு சென்றனர்.

போலீசார் வருவதை அறிந்த மகேஷ்வரன் தலைமறைவானார். அதே நேரத்தில் வீடியோ எடுக்க உதவியதாக கூறப்பட்ட ராமசந்திரமூர்த்தியை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானதை தொடர்ந்து ஆர்.டி.ஓ. சுப்புலட்சுமி, தாசில்தார் பாபு ஆகியோர் சம்பந்தப்பட்ட பெட்டிக்கடைக்கு சென்று கடைக்கு 'சீல்' வைத்தனர்.

Tags:    

Similar News