தமிழ்நாடு (Tamil Nadu)

ஒற்றை தலைமைக்கு ஆதரவு அதிகரிப்பு- எடப்பாடி பழனிசாமி முந்துகிறார்

Published On 2022-06-20 07:02 GMT   |   Update On 2022-06-20 07:02 GMT
  • அ.தி.மு.க.வின் அனைத்து பிரிவுகளிலும் எடப்பாடி பழனிசாமிக்கு அதிக ஆதரவு இருக்கிறது.
  • ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு கொடுக்கும் தலைவர்கள் யார், யார் என்று தகவல்கள் சேகரித்து வருகிறார்கள்.

சென்னை:

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமையை கொண்டு வர வேண்டும் என்பதில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மிகவும் உறுதியாகவும், தீவிரமாகவும் உள்ளார்.

அ.தி.மு.க. மூத்த தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், அணி தலைவர்கள், ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகளின் கருத்தும் ஒற்றை தலைமையை நோக்கியே இருக்கிறது. அ.தி.மு.க.வில் உள்ள 80 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் ஒற்றை தலைமையை விரும்புகிறார்கள்.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் ஒற்றை தலைமையை விரும்பவில்லை. தற்போது இருப்பது போல தனக்குரிய அதிகாரங்கள் அப்படியே இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

இதனால் அ.தி.மு.க.வில் கடந்த ஒரு வாரமாக பெரும் குழப்பம் நிலவுகிறது. ஓ.பன்னீர்செல்வத்தை சமரசம் செய்ய அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.

இந்த பரபரப்புக்கிடையே அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டம் வருகிற 23-ந்தேதி (வியாழக்கிழமை) சென்னையில் நடைபெற உள்ளது. இதில் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொள்ள உள்ளனர். கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது.

அதோடு சில முக்கிய தீர்மானங்களும் பொதுக்குழு கூட்டத்தில் கொண்டுவரப்பட உள்ளது. சில விதிகளை மாற்றி புதிய அம்சங்களை சேர்க்கவும் திட்டமிட்டுள்ளனர். அந்த சமயத்தில் ஒற்றை தலைமை குறித்தும் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அ.தி.மு.க.வி.ல் தனது கையெழுத்து மற்றும் ஒப்புதல் இல்லாமல் எந்த மாற்றமும் செய்ய முடியாது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறி இருந்தார். ஆனால் தீர்மானங்கள் கொண்டு வரவும், நிறைவேற்றவும் ஓ.பி.எஸ். கையெழுத்து தேவையில்லை என்பது சட்ட நிபுணர்கள் மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. எனவே பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை தீர்மானம் கொண்டுவர வாய்ப்புள்ளது.

அப்படி கொண்டுவரும் பட்சத்தில் தலைவர் அல்லது பொதுச்செயலாளர் பதவி கொண்டுவரப்பட்டு அதற்கு தேர்தல் நடத்த அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதற்கு இடம் கொடுத்து விடக்கூடாது என்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் அடுத்தடுத்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

ஒற்றை தலைமை தீர்மானம் கொண்டுவரப்பட்டால் அதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடரவும் அவர் முடிவு செய்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த வழக்கை மிக எளிதாக எதிர்கொண்டு வெற்றி பெற முடியும் என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

ஒற்றை தலைமை விவகாரத்தில் அ.தி.மு.க. தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் யாருக்கு அதிக ஆதரவு இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே கடந்த ஒருவாரமாக மிகப் பெரிய பலப்பரீட்சை நடந்தது. இதில் எடப்பாடி பழனிசாமி எட்டி பிடிக்க முடியாத வேகத்தில் முன்னேறி உள்ளார்.

அ.தி.மு.க.வின் அனைத்து பிரிவுகளிலும் எடப்பாடி பழனிசாமிக்கு அதிக ஆதரவு இருக்கிறது. ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனி மாவட்ட நிர்வாகிகள் கூட எடப்பாடி பழனிசாமியை தான் ஆதரிக்கிறார்கள்.

அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் பெரும்பாலானவர்கள் இதுவரை தங்களது நிலைப்பாட்டை வெளியில் சொல்லாமல் இருந்தனர். ஆனால் நேற்று முதல் அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒற்றை தலைமை இருந்தால்தான் அ.தி.மு.க. பலமாக இருக்கும் என்று பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதேசமயத்தில் எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தையும் வெளியிடவில்லை. அவர் தனது வீட்டில் இருந்தபடி மூத்த தலைவர்கள் மூலம் காய்களை நகர்த்தி வருகிறார்.

ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு கொடுக்கும் தலைவர்கள் யார், யார் என்று தகவல்கள் சேகரித்து வருகிறார்கள். அதன் அடிப்படையில் அதிரடி நடவடிக்கைகளும் ஓசையின்றி நடந்து வருகின்றன.

நேற்று ஓ.பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி சந்தித்து பேசினார். இதற்காக ஓ.பன்னீர்செல்வத்திடம் விளக்கம் கேட்க வேண்டும் என்று பெரும்பாலான அ.தி.மு.க. தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோன்று சசிகலா ஆதரவாளர்களும் மறைமுகமாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக செயல்படுவதாக தெரியவந்துள்ளது. இதுபற்றியும் எடப்பாடி பழனிசாமி ஆதரவு தலைவர்கள் கண்காணித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

எனவே அ.தி.மு.க.வில் சில அதிரடி நடவடிக்கைகள் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று கூறப்படுகிறது.

Tags:    

Similar News