அமைச்சர் சிவசங்கர் குறித்து முகநூலில் அவதூறு தகவல்- பா.ம.க. பிரமுகர் மீது வழக்கு
- பா.ம.க. பிரமுகர் பிரபு மீது அரியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பிரமுகர் சுதாகர் மீது வழக்கு பதிவு செய்து ஆண்டிமடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அரியலூர்:
சிதம்பரம் மக்களவை தொகுதி தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. அரசியல் கட்சியினர் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சரும் அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளருமான எஸ்.எஸ்.சிவசங்கர் குறித்து முகநூலில் தவறான செய்தி வெளியிட்டதாக கூறப்படுகிறது. இது பற்றி தி.மு.க. வக்கீல் அன்பரசு கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதி, ஓலைப்பாடி கிராமத்தை சார்ந்த பா.ம.க. பிரமுகர் பிரபு மீது அரியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனை போல, தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து முகநூலில் தவறான செய்தி வெளியிட்டதாக தி.மு.க. வக்கீல் ராஜசேகர் கொடுத்த புகாரின் பேரில், அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், கொலையனூர் கிராமத்தை சார்ந்த அ.தி.மு.க. பிரமுகர் திருமுருகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடத்தில் அனுமதி இல்லாமல் சுவர் விளம்பரம் செய்ததாக பெரிய கிருஷ்ணாபுரம் கிராம நிர்வாக அதிகாரி பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில், பள்ள கிருஷ்ணாபுரத்தை சார்ந்த அ.தி.மு.க. பிரமுகர் சுதாகர் மீது வழக்கு பதிவு செய்து ஆண்டிமடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் விசாரணை நடத்தி வருகிறார்கள்.