சோத்துப்பாறை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்வு: கும்பக்கரை அருவிக்கு செல்ல தடை
- கனமழை காரணமாக கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது.
- ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழை காரணமாக நேற்று இரவு முதல் விட்டுவிட்டு மின்தடை ஏற்பட்டது.
கூடலூர்:
தேனி மாவட்டத்தில் நடப்பாண்டு பருவமழை பொய்த்துப்போன நிலையில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைபெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது.
இதனால் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று 306 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 620 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 118.25 அடியாக உள்ளது. அணையிலிருந்து 300 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர்இருப்பு 2312 மி.கனஅடியாக உள்ளது.
இதேபோல் வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியிலும் நேற்று கனமழை பெய்தது. வைகை அணையில் மட்டும் 15 செ.மீ மழை கொட்டியது. இதனால் அணையின் நீர்மட்டம் 47.08 அடியாக உயர்ந்தது. நேற்று 41 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 331 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து 69 கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 1630 மி.கனஅடியாக உள்ளது.
மஞ்சளாறு அணைக்கு நேற்று நீர்வரத்து இல்லாமல் இருந்தது. இன்று காலை அணைக்கு 108 கனஅடி நீர் வருகிறது. நீர்மட்டம் 48.50 அடியாக உள்ளது. நீர் இருப்பு 312.32 மி.கனஅடியாக உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து 73.80 அடியாக உள்ளது. நீர்வரத்து 47 கனஅடி, திறப்பு 3 கனஅடி, நீர் இருப்பு 33.34 மி.கனஅடி.
கனமழை காரணமாக கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனால் கடந்த 2 நாட்களாக அதிகளவு சுற்றுலா பயணிகள் வந்து குளித்து மகிழ்ந்தனர். இன்று காலை முதல் தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்ததால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை கும்பக்கரை அருவிக்கு சுற்றுலா பயணிகள் யாரும் வரவேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் வார விடுமுறை நாட்களில் அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.
பெரியாறு 39, தேக்கடி 13.4, கூடலூர் 2.6, உத்தமபாளையம் 3.2, சண்முகாநதி அணை 7.4, போடி 18.8, வைகை அணை 150.2, சோத்துப்பாறை 61, மஞ்சளாறு 85, பெரியகுளம் 80.4, வீரபாண்டி 11.2, அரண்மனைப்புதூர் 24, ஆண்டிபட்டி 98.2 மி.மீ மழையளவு பதிவானது.
ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழை காரணமாக நேற்று இரவு முதல் விட்டுவிட்டு மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.