மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்- பள்ளி கல்வித்துறை இயக்குனர் அறிவுறுத்தல்
- பள்ளிகளில் உள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும்.
- தண்ணீரை சுட வைத்து பருக அறிவுறுத்த வேண்டும்.
சென்னை:
தமிழக பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் இன்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பருவமழை தொடர்பாக முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அறிவுறுத்தி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மின் இணைப்புகளை கண்காணிக்க வேண்டும். திறந்தவெளி கால்வாய்களை தூர்வாரி மூட வேண்டும்.
பள்ளிகளில் உள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும். பள்ளிகளின் சுற்றுச்சுவர் உறுதித்தன்மையை கண்காணிக்க வேண்டும். பழுதடைந்த சுற்றுச்சுவர்களை சுற்றி வேலி அமைத்து தடுப்பு உருவாக்க வேண்டும்.
மழை காரணமாக வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகள் பாதிக்கப்பட்டால் அவற்றை பயன்படுத்தாமல் பூட்டி வைக்க வேண்டும். மின் கசிவு ஏற்படுகிறதா? என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
பள்ளி வளாகத்தில் நீர் தேக்கங்கள், திறந்தவெளி கிணறுகள், தரைமட்ட நீர்தேக்க தொட்டிகள் இருக் கும் இடங்களில் அவை மூடப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.
மழை காலங்களில் ஆறுகளில் நீர் பெருக்கு ஏற்படலாம் என்பதால் மாணவர்கள் வெளியில் செல்வதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும். வெள்ளத்தை வேடிக்கை பார்க்க செல்வதை தடுக்க வேண்டும்.
மாணவர்கள் வசிக்கும் பகுதிகளில் மழை நீர் தேங்குவதால் கொசு உருவாகும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும் தண்ணீரை சுட வைத்து பருக அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் அவர் கூறியுள்ளார்.