முதலைகளிடமிருந்து மோடி தப்பித்த கதை தமிழ்நாட்டு பாடங்களில் இல்லை - சு.வெங்கடேசன்
- மாநில பாடத்திட்டம் தரம் தாழ்ந்து இருப்பதாக ஆளுநர் ஆர். என். ரவி கூறியுள்ளார்.
- ஆளுநரின் இந்த பேச்சுக்கு அமைச்சர் பொன்முடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தேசிய பாடத்திட்டத்தை ஒப்பிடும்போது,மாநில பாடத்திட்டங்கள் தரம் மோசமாக உள்ளது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுநரின் இந்த பேச்சுக்கு அமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கண்டித்துள்ளனர்.
இந்நிலையில் ஆளுநரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "மாநில பாடத்திட்டம் தரம் தாழ்ந்து இருப்பதாக ஆளுநர் ஆர். என். இரவி கூறியுள்ளார்.
புல் புல் பறவை சாவர்க்கரை காப்பாற்றிய கதையோ, முதலைகளிடமிருந்து மோடி தப்பித்த கதையோ தமிழ்நாட்டு பாடங்களில் இல்லை.
தனக்கு பிடித்த காட்சி இல்லாத ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் உரிமை ஆளுநருக்கும் உண்டு" என்று பதிவிட்டுள்ளார்.
அண்மையில் மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட உயர்கல்வி நிலையங்களின் தரவரிசை பட்டியலில், முதல் 100 இடங்களில் தமிழ்நாட்டிலிருந்து 22 பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.