பெண்கள் திடீர் போராட்டம்: சீரான குடிநீர் வழங்க கோரி தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு
- திடீரென காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- குடிநீர் கட்டணம் ரூ. 2000 ரூபாய் பணம் கட்டியும் தண்ணீர் கிடைக்கவில்லை என்று ஆவேசத்துடன் தெரிவித்தனர்.
பவானி:
ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சிக்கு உட்பட்ட 16-வது வார்டில் திருநீலகண்டார் வீதி அமைந்துள்ளது. இந்த வீதியின் ஒரு சிறிய சந்து பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர்.
இவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக பவானி நகராட்சி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் காவிரி ஆற்று குடிநீர் அந்த பகுதி மக்க ளுக்கு முறையாக கிடைக்க வில்லை என அவர்கள் புகார் கூறினர்.
மேலும் இதுகுறித்து அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியினரிடம் பல முறை புகார் கூறியும் இது வரை முறையாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் பவானி திருநீலகண்டர் வீதியை சேர்ந்த பொதுமக்கள் முறையான குடிநீர் வழங்க கோரி இன்று காலை அந்த பகுதியில் ஒன்று திரண்டனர். இதை தொடர்ந்து அவர்கள் திடீரென காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
குடிநீர் முறையாக வழங்க கோரி அந்த பகுதி மக்கள் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்தனர். மேலும் கருப்பு கொடிக்கட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இது குறித்து அப்பகுதி பெண்கள் கூறும் போது,
பவானி திருநீலர் கண்ட வீதியில் சரியாக தண்ணீர் கிடைப்பது இல்லை. பலர் மின்மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சி எடுத்துக் கொள்வதால் எங்கள் பகுதிக்கு முறையாக குடிநீர் கிடைக்காமல் மிகுந்த அவதிப்படுகிறோம்.
தினமும் ஒரு குடம் இரண்டு குடம் மட்டுமே தண்ணீர் கிடைப்பதால் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகிறோம். குடிநீர் கட்டணம் ரூ. 2000 ரூபாய் பணம் கட்டியும் தண்ணீர் கிடைக்கவில்லை என்று ஆவேசத்துடன் தெரிவித்தனர்.
எனவே முறையான குடிநீர் வழங்க வேண்டும். மின்மோட்டார் வைத்து தண்ணீர் எடுப்பவர்களை கண்டறிந்து மின் மோட்டார்களை நகராட்சி நிர்வாகத்தினர் பறிமுதல் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி குடிநீர் பிரிவு அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அப்பகுதியைச் சேர்ந்த பெண்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். தங்கள் பிரச்சனை குறித்து உரிய தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர்.