தமிழ்நாடு

வாடகை வேன்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காட்சி - போராட்டத்தில் ஈடுப்பட்ட வாகன உரிமையாளர்கள்

ஆவின் வாடகை வாகன உரிமையாளர்கள் திடீர் ஸ்டிரைக்- பால் சப்ளை பாதிப்பால் பொதுமக்கள் அவதி

Published On 2024-05-29 04:55 GMT   |   Update On 2024-05-29 04:55 GMT
  • அதிகாலை 3, 4 மணிக்கு பால் பாக்கெட்டுகள் வாகனங்களில் ஏற்றப்பட்டு வெளியூர்களுக்கு அனுப்பப்படும்
  • போராட்டத்தில் டிரைவர்களிடம் இ.எஸ்.ஐ. மற்றும் பி.எப். பிடித்தம் செய்யவும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

திருச்சி:

திருச்சி ஆவின் பால் பண்ணை நிறுவனம் நாள் ஒன்றுக்கு காலை நேரத்தில் மட்டும் பேக்கிங் செய்யப்பட்ட 1 லட்சத்து 10 ஆயிரம் லிட்டர் பால் திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்கிறது.

இந்த பால் பாக்கெட்டுகள் ஆவின் நிறுவன வாகனங்கள் மட்டுமல்லாமல் வாடகை வாகனங்கள் மூலமாகவும் மாவட்ட முழுவதும் ஆவின் ஏஜெண்டுகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது.

அந்த வகையில் 46 வேன், டெம்போ உள்ளிட்ட வாடகை வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஆவின் நிறுவனம் கடந்த 45 நாட்களுக்கு உரிய வாடகை பாக்கி தொகையை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த வாடகை வாகன ஓட்டுனர்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் இன்று (புதன்கிழமை) காலை திடீர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகாலை 3, 4 மணிக்கு பால் பாக்கெட்டுகள் வாகனங்களில் ஏற்றப்பட்டு வெளியூர்களுக்கு அனுப்பப்படும். ஆனால் வாடகை வாகன டிரைவர்கள் தங்கள் வாகனங்களை இயக்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதைத் தொடர்ந்து ஆவின் நிர்வாகம் தங்களுக்கு சொந்தமான வாகனங்கள் மற்றும் சில வாடகை ஆட்டோக்கள் மூலமாக அருகாமையில் உள்ள ஏஜெண்டுகளுக்கு பால் சப்ளை செய்தனர். இருப்பினும் பெரும்பாலான ஆவின் ஏஜெண்டுகளுக்கு இன்று காலை பால் சப்ளை செய்யப்படவில்லை. இதனால் திருச்சி மாநகரில் காலை ஆவின் பால் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இதையடுத்து ஆவின் துணைப் பொது மேலாளர் நாகராஜ் தலைமையிலான அதிகாரிகள் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சுமுக உடன்பாடு ஏற்பட்டது.

அதன்படி இன்று காலை 11 மணிக்கு வாடகை பாக்கியில் பாதி தொகையான ரூ.27 லட்சமும், நாளை மீதித்தொகை ரூ.27 லட்சமும் வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து வாடகை வாகன டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டனர். மேலும் இந்த போராட்டத்தில் டிரைவர்களிடம் இ.எஸ்.ஐ. மற்றும் பி.எப். பிடித்தம் செய்யவும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால் இன்று மாலை வழக்கம் போல் வாடகை வாகன டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் வாகனங்களை இயக்குவதாக உறுதியளித்துள்ளனர்.

Tags:    

Similar News