ஜெயக்குமார் வழக்கில் சம்மன்: பெண் நிர்வாகி உள்பட 50 பேரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை
- சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நடந்த விசாரணையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் நிர்வாகி உள்பட 2 பேர் ஆஜராகினர்.
- முழுமையாக நீதிமன்றத்திற்கு ஒப்படைக்கப்பட்டு அதன் பின்னரே சி.பி.சி.ஐ.டி உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்படும்
நெல்லை:
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த கே.பி.கே. ஜெயக்குமார் மர்ம மரண வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் இதுவரையிலும் உறுதியான முடிவுக்கு வர முடியாமல் சி.பி.சி.ஐ.டி போலீசாரும் திணறி வருகின்றனர்.
இந்நிலையில் ஜெயக்குமார் தனது கைப்பட எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்த நபர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.
சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நடந்த விசாரணையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் நிர்வாகி உள்பட 2 பேர் ஆஜராகினர்.
இதுவரை சுமார் 50 பேரிடம் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் நேரடி விசாரணை நடத்தி முடித்துள்ளனர்.
இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் கூறுகையில், இந்த வழக்கிற்கு தேவையான முக்கிய ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களை திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். அதே நேரத்தில் அவரது உடல் பிரேத பரிசோதனையின் இறுதி அறிக்கை இதுவரை தங்களுக்கு கிடைக்கவில்லை.
அவை முழுமையாக நீதிமன்றத்திற்கு ஒப்படைக்கப்பட்டு அதன் பின்னரே சி.பி.சி.ஐ.டி உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்படும்.
அந்த அறிக்கைகள் முழுமையாக கிடைத்த பின்னரே இறுதியாக ஒரு முடிவுக்கு வர முடியும் என்றனர்.