தமிழ்நாடு

10 சதவீத இடஒதுக்கீடு விஷயத்தில் தமிழக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? 12ம் தேதி முடிவு செய்கிறது

Published On 2022-11-08 09:29 GMT   |   Update On 2022-11-08 09:29 GMT
  • அரசு வழக்கறிஞர்கள் மற்றும் மூத்த அமைச்சர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்
  • அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சி சார்பாகவும் 2 பிரதிநிதிகள் பங்கேற்க அழைப்பு

சென்னை:

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு குறித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். சமூக நீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இன்று தலைமை செயலகம் வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு வழக்கறிஞர்கள் மற்றும் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். 10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான தீர்ப்பை மறு ஆய்வு செய்வது தொடர்பாக இந்த ஆலோசனை நடத்தப்பட்டது.

ஆலோசனையில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, தங்கம் தென்னரசு. எ.வ.வேலு, கே.என்.நேரு, வில்சன் எம்.பி., தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் அரசு வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனையின் முடிவில், 10 சதவீத இடஒதுக்கீடு விஷயத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை முடிவு செய்வதற்காக 12ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

சென்னை தலைமைச் செயலகத்தில் 12ம் தேதி காலை 10 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இதில் ஒவ்வொரு அரசியல் கட்சி சார்பாகவும் 2 பிரதிநிதிகள் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் சட்டமன்ற அனைத்துக்கட்சி தலைவர்கள் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில் அரசு அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

Tags:    

Similar News