ஓய்வூதியர்களுக்கு வீட்டு வாசலிலேயே உயிர்வாழ் சான்றிதழ்- தபால் துறை ஏற்பாடு
- பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தி, முக அடையாளம் வைத்தும், டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது.
- சேவை கட்டணமாக ரூ.70 தபால்காரரிடம் செலுத்த வேண்டும்.
சென்னை:
ஓய்வூதியர்கள் தொடர்ந்து ஓய்வூதியம் பெற தங்கள் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டி உள்ளது. இதற்காக 'இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி' திட்டத்தின் கீழ் ஓய்வூதியர்களின் வீட்டு வாசலிலேயே, பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தி, முக அடையாளம் வைத்தும், டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது.
ஓய்வூதியர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார், செல்போன் எண், பி.பி.ஓ.எண் மற்றும் ஓய்வூதிய வங்கி கணக்கு விவரங்களை தெரிவித்து, கைவிரல் ரேகை பதிவு செய்தால், ஒரு சில நிமிடங்களில் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும். இதற்கு சேவை கட்டணமாக ரூ.70 தபால்காரரிடம் செலுத்த வேண்டும்.
அதேபோல் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சுயநிதி பள்ளிகளில் மாநில பாடதிட்டத்தில் தமிழ் வழியில் 3 முதல் பிளஸ்-2 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, மத்திய, மாநில அரசுகள் வழங்கும் கல்வி உதவித் தொகைகள், ஊக்கத்தொகைகள் பெறுவதற்கு ஆதார் எண் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு அவசியமாகும்.
5-ம் வகுப்பு வரை படிப்பவர்களுக்கு தபால் துறை கணக்கும், 6 முதல் பிளஸ்-2 வரை படிப்பவர்களுக்கு தபால் துறை வங்கி கணக்கும் தொடங்க தமிழக பள்ளிக்கல்வி துறையுடன் தபால் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. எனவே பள்ளிகளிலோ அல்லது தபால் நிலையங்களில் கணக்குகளை தொடங்கலாம் என்று முதன்மை தபால் துறை தலைவர் சுவாதி மதுரிமா தெரிவித்துள்ளார்.