சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் திருமண சீர்வரிசை வழங்கும் விழா- திரளாக பக்தர்கள் பங்கேற்பு
- அறுபடை வீடுகளில 4-ம் படைவீடான சுவாமிமலையில் சுவாமிநாதசாமி கோவில் உள்ளது.
- தாய் வீட்டு திருமண சீர்வரிசை வழங்கும் விழா நடந்தது.
சுவாமிமலை:
அறுபடை வீடுகளில 4-ம் படைவீடான சுவாமிமலையில் சுவாமிநாதசாமி கோவில் உள்ளது.
இக்கோவிலில் பங்குனி மாதத்தில் வள்ளிநாயகி திருமண நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி, 2-ம் ஆண்டாக நேற்று வள்ளி நாயகி, முருகப்பெருமான் திருமணம் நடைபெற்றது. முன்னதாக, குன்றக்குறவர் இன மேலப்பாடி வள்ளிநாயகிக்கும், குறவேடன் காவடி முருகப்பெருமானுக்கும் தாய் வீட்டு திருமண சீர்வரிசை குன்றக்குறவர்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
குன்ற குறவர் வள்ளி நாயகிக்கு குன்ற குறவர் இனத்தாரின் தாய் வீட்டு சார்பில் 30 வகையான பழங்கள், சீர்வரிசை, பட்டுப்புடவை, வேஷ்டி, துண்டு ஆகியவற்றை மேளதாளங்கள் முழங்க, சிலம்பம் விளையாட்டு, வில் அம்புடன் வாணவேடிக்கையுடன் காவிரி ஆற்றங்கரையில் இருந்து ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலை வந்தடைந்தது.
தொடர்ந்து, தாய் வீட்டு திருமண சீர்வரிசை வழங்கும் விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டனர். விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் அன்னதானமும், பூர்வீக உணவான தேனும், தினையும் வழங்கப்பட்டது.