தமிழக வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்- என்.ஆர்.தனபாலன் கோரிக்கை
- அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ததை பெருந்தலைவர் மக்கள் கட்சி வரவேற்கிறது.
- அரசு வேளாண் பல்கலைக்கழகத்துக்கு வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரை சூட்டி அவரின் புகழுக்கு பெருமை சேர்க்கவேண்டும்.
பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வயது முதிர்வு காரணமாக உயிரிழந்த தமிழக வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தியாவில் பசுமை புரட்சியின் தந்தை என்று அழைக்கப்பட்டவர், உணவு பஞ்சம் ஏற்பட்ட போது அதற்கான தீர்வை கண்டு உணவு பாதுகாப்புக்கான பங்களிப்பை தந்தவர். வேளாண் தொழில் பற்றிய முற்போக்கான சிந்தனை கொண்ட எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவிற்கு தமிழக அரசு சார்பில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ததை பெருந்தலைவர் மக்கள் கட்சி வரவேற்கிறது. அதே நேரத்தில் தமிழகத்தில் உள்ள அரசு வேளாண் பல்கலைக்கழகத்துக்கு வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரை சூட்டி அவரின் புகழுக்கு பெருமை சேர்க்கவேண்டும்.
அதேபோன்று இந்தியாவின் மிக உயரிய விருதான பாரதரத்னா விருதினை மறைந்த தலைவருக்கு வழங்கி அவருக்கும் முற்போக்கு சிந்தனையுடன் செயல்பட்ட வேளாண் பற்றிய ஆராய்ச்சிக்கும் பெருமை சேர்த்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.