தமிழ்நாடு

கர்நாடகாவிடம் காவிரி நீரை பெறாமல் தமிழக அரசு வேடிக்கை பார்ப்பதா?- ஜி.கே.வாசன் கண்டனம்

Published On 2024-06-26 07:55 GMT   |   Update On 2024-06-26 07:55 GMT
  • கர்நாடக அரசு தமிழகத்துக்கான காவிரி நீரை திறந்து விடுவதில் முரண்படுவது கண்டிக்கத்தக்கது.
  • தமிழகத்தில் மேட்டூர் அணை திறக்கப்படாமல் போதிய தண்ணீர் கிடைக்காமல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கர்நாடக அரசு தமிழகத்துக்கான காவிரி நீரை திறந்து விடுவதில் முரண்படுவது கண்டிக்கத்தக்கது.

ஜூன் 24 வரை 7.236 டி.ம்.சி. தண்ணீரை திறந்துவிடவும், ஜூலை மாதத்திற்கு 31.24 டிஎம்சி தண்ணீரை திறந்து விடவும் காவிரி மேலாண்மை ஆணையத்தால் கர்நாடக அரசுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டது. ஆனால் ஜூன் மாதத்திற்கே இன்னும் 5.376 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விடாமல் காலம் தாழ்த்துகிறது கர்நாடக அரசு. இப்படி தமிழகத்திற்கான காவிரி நீரை உரிய காலத்தில் திறந்து விடாததால் தமிழக விவசாயத்திற்கும், குடிநீருக்கும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு விவசாயிகளும், பொது மக்களும் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.

காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசின் செயல்பாட்டை தமிழக அரசு எக்கோணத்தில் பார்க்கிறது என்று தெரியவில்லை. தமிழகத்தில் மேட்டூர் அணை திறக்கப்படாமல் போதிய தண்ணீர் கிடைக்காமல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடரக்கூடாது. எனவே ஜூன், ஜூலை மாதத்திற்கு கர்நாடக காவிரியிலிருந்து தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய உரிய நீரை காலத்தே தமிழக அரசு கர்நாடக அரசை வலியுறுத்தி பெற்றுத்தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News