சென்னை குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா தண்ணீரை சற்று கூடுதலாக திறந்து விடுங்கள்- ஆந்திராவுக்கு, தமிழக அரசு கோரிக்கை
- பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திரா அரசுக்கு கடிதம் எழுதினர்.
- மே 3-ந் தேதி முதல் இன்று காலை வரை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 2,584 டி எம். சி. தண்ணீர் வந்து உள்ளது.
ஊத்துக்கோட்டை:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இந்த ஏரிக்கு கிருஷ்ணாநதி நீர் பங்கீடு திட்டப்படி ஆந்திரா அரசு வருடம் தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டும்.
ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி., ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரை நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும்.
கடந்த ஜனவரி மாதத்தில் பூண்டி ஏரியில் போதுமான நீர் இருப்பு இருந்ததால் கிருஷ்ணா நதிநீரை பெறவில்லை. கோடை வெயில் காரணமாக பூண்டி ஏரியின் நீர்மட்டம் குறைந்து வந்ததால் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திரா அரசுக்கு கடிதம் எழுதினர்.
இதனை ஏற்று கடந்த மே 1-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதிகபட்சமாக வினாடிக்கு 530 கனஅடி வீதம் தண்ணீர் வந்து சேர்ந்தது. மே 3-ந் தேதி முதல் இன்று காலை வரை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 2,584 டி எம். சி. தண்ணீர் வந்து உள்ளது.
பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3,231 டி. எம். சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 30.09 அடியாக பதிவாகியது. 1,760 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு கிருஷ்ணா நீர் மற்றும் மழைநீர் வினாடிக்கு 220 கன அடியாக வந்து கொண்டு இருக்கிறது. பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்காக பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 40 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
பூண்டி ஏரியின் நீர் இருப்பு தற்போது 54 சதவீதம் மட்டும் நிரம்பி உள்ளது. மேலும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் தண்ணீர் இருப்பு 70 சதவீதமாக உள்ளது. எனவே குடிநீர் ஏரிகளில் மேலும் தண்ணீரை சேமித்து வைக்க தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். தற்போதைய நிலவரப்படி குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் மொத்தம் 6,866 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது(மொத்த கொள்ளளவு 11 ஆயிரத்து 757 மி.கன அடி ஆகும். சென்னை யின் குடிநீர் தேவைக்காக தினமும் 1000 மில்லியன் லிட்டர் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.
வடகிழக்கு பருவமழை வருகிற நவம்பர், டிசம்பர் மாதம் தீவிரம் அடையும். பருவமழை தொடங்குவதற்கு முன்பு வரை குடிநீரை தட்டுப்பாடு இன்றி சப்ளை செய்யும் வகையில் கிருஷ்ணா தண்ணீரை கூடுதலாக பெற தமிழக அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். இதைத்தொடர்ந்து கண்டலேறு அணையில் இருந்து கூடுதலாக கிருஷ்ணா தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று ஆந்திரா அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர். தற்போது கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 2750 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த தண்ணீர் பூண்டி ஏரிக்கு 220 கன அடி மட்டுமே வருகிறது. கடந்த வாரத்தில் தண்ணீர் வரத்து 100 கனஅடிக்கும் கீழ் குறைந்தது. ஆந்திர விவசாயிகள் தங்களது விவசாயத்துக்கு அதிக அளவு தண்ணீர் எடுப்பதால் பூண்டி ஏரிக்கு நீர் வரத்து குறைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.