தமிழ்நாடு

வைகை அணையில் 4-வது நாளாக மீனவர்கள் போராட்டம்

Published On 2023-04-23 07:00 GMT   |   Update On 2023-04-23 11:34 GMT
  • தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் மீன்பிடி தொழில் நடைபெற்று வருகிறது.
  • மீனவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் குதித்தனர்.

ஆண்டிபட்டி:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் மீன்பிடி தொழில் நடைபெற்று வருகிறது. இந்த அணையில் மீன்பிடி உரிமை அரசே ஏற்று நடத்தி வந்த நிலையில் திடீரென தனியாருக்கு வழங்கப்பட்டது. இதனை கண்டித்தும் அணையில் மீண்டும் பழைய முறைப்படி மீன்பிடிக்க அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி மீனவர்கள் வைகை அணை நீர்தேக்கத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மீனவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் குதித்தனர். இந்நிலையில் ஆண்டிபட்டி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் திருமுருகன், டி.எஸ்.பி ராமலிங்கம், இன்ஸ்பெக்டர் சிவக்குமார், மீன்வள உதவி இயக்குனர் பஞ்சராஜா முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது மீனவர்களுக்கு சரிபங்கு அடிப்படையில் மீன்கள் வழங்கவேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால் தனியார் மீன்பிடி உரிமம் பெற்றவர்கள் இதற்கு சம்மதிக்கவில்லை. அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியும் இருதரப்பும் ஏற்றுக்கொள்ளாததால் கூட்டம் தோல்வியில் முடிந்தது. இதனைதொடர்ந்து வருகிற 25-ந்தேதி அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இரவு நேரத்தில் மீனவர்கள் யாரும் வைகை அணை நீர்தேக்கத்தில் மீன்பிடிக்க கூடாது என்பதற்காக போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 4-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தனியாருக்கு உரிமம் வழங்கப்பட்டதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு அரசு சுமூகதீர்வு காணவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 16 பேர் மீது வைகை அணை சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News