கூடங்குளத்தில் தரை தட்டிய மிதவை கப்பலில் இருந்து நீராவி ஜெனரேட்டர்களை மீட்க கடலுக்குள் ரூ.2 கோடியில் சாலை
- கடலில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் மிதவை கப்பலில் விரிசல் ஏற்பட்டு சேதம் அடைந்துள்ளது.
- அணு உலை வளாகத்தில் இருந்து சுமார் 150 மீட்டர் தூரத்தில் மிதவை கப்பல் தரை தட்டி நிற்கிறது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது. மேலும் அங்கு 4 அணு உலைகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதில் 5, 6-வது அணு உலைகளுக்கான 4 நீராவி ஜெனரேட்டர்கள் ரஷியாவில் இருந்து கடந்த மாதம் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தது. அங்கிருந்து 2 ஜெனரேட்டர்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு கடல் வழியாக ஏற்கனவே கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து மற்ற 2 நீராவி ஜெனரேட்டர்களும் கடந்த 7-ந்தேதி மிதவை கப்பலில் ஏற்றி, இழுவை கப்பல் மூலமாக கூடங்குளத்துக்கு கொண்டு செல்லப்பட்ட போது தரை தட்டியது.
இதில் மிதவை கப்பல் கடலில் சிக்கிக் கொண்டது. அதனை மீட்க கொழும்புவில் இருந்து மற்றொரு கப்பல் வரவழைக்கப்பட்ட நிலையில், நீராவி கொள்கலன்கள் எடை அதிகமாக இருப்பதால், மிதவை கப்பலை இழுக்க முடியாது என கப்பல் அதிகாரிகள் கை விரித்துவிட்டனர். இதனால் வேறு வழிகள் குறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் கடலில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் மிதவை கப்பலில் விரிசல் ஏற்பட்டு சேதம் அடைந்துள்ளது. இதனால் அந்த கப்பல் மெல்ல மெல்ல கடலில் மூழ்க தொடங்கி உள்ளதால், நீராவி கொள்கலன்களும் கடலில் சரிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அணு உலை வளாகத்தில் இருந்து சுமார் 150 மீட்டர் தூரத்தில் மிதவை கப்பல் தரை தட்டி நிற்கிறது. இதனால் சாலை அமைத்து ராட்சத கிரேன் மூலமாக கொள்கலனை மீட்க முடிவு செய்யப்பட்டது.
இதனால் ரூ.2 கோடி செலவில் அங்கு சாலை அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. கொள்கலன் கடலில் சரிந்து விழுவதற்குள் அதனை மீட்க துரிதமான நடவடிக்கைகளை அணு உலை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.