தமிழ்நாடு (Tamil Nadu)

அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்ற 23 தீர்மானங்கள் பட்டியல் தயார்

Published On 2022-06-21 05:46 GMT   |   Update On 2022-06-21 09:30 GMT
  • பொதுக்குழு நடைபெறும் வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
  • 2750 பேர் அமரக்கூடிய வகையில் இருக்கைகள் போடப்படுகின்றன. சிறப்பு விருந்தினர்களுக்கு அனுமதி இல்லாததால் சுமார் 1000 இருக்கைகள் குறைக்கப்பட்டு உள்ளது.

சென்னை:

அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டு உள்ளது.

பொதுக்குழுவை தள்ளி வைக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கூறி வருகிறார். திட்டமிட்டபடி நாளை மறுநாள் பொதுக்குழுவை நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் செய்து வருகின்றனர்.

இதற்கிடையில் பொதுக்குழுவில் நிறைவேற்ற பொதுவான 23 தீர்மானங்கள் இறுதி செய்யப்பட்டு உள்ளன. 12 பேர் கொண்ட தீர்மான குழுவினர் இதனை இறுதி செய்து இருவருக்கும் கொடுத்துள்ளனர். அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க. முடக்குவது கண்டித்தும், ஆளும் கட்சியினர் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் தீர்மானங்கள் கொண்டு வரப்படுகிறது.

இது தவிர முல்லைப் பெரியாறு அணை, மேகதாது, காவிரி பிரச்சினை போன்ற பொதுவான பிரச்சினைக்குரிய தீர்மானங்களும் இடம்பெறுகின்றன.

இந்த தீர்மானங்களை யார்-யார் முன்மொழிவது, வழிமொழிவது என்பது போன்ற பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் அடங்கிய தீர்மான குழு கொண்டு வந்துள்ள இத்தீர்மானங்கள் பொதுக்குழுவில் வைக்கப்பட்டு நிறைவேற்றப்படும்.

ஒற்றை தலைமை குறித்த தீர்மானம் இதில் இடம்பெறவில்லை. ஒற்றை தலைமை தீர்மானத்தை பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானமாக கொண்டு வர எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

பொதுக்குழுவில் முதலில் 15 தீர்மானங்கள் கொண்டு வரலாம் என ஆலோசிக்கப்பட்டது. பின்னர் 18 ஆகவும், இறுதியாக 23 ஆகவும் முடிவு செய்யப்பட்டது. இந்த தீர்மானங்களில் ஒற்றை தலைமை குறித்த தீர்மானம் இடம்பெறவில்லை.

பொதுக்குழு நடப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. பொதுக்குழுவில் வைத்து ஒற்றை தலைமை பிரச்சினை குறித்து விவாதிக்கக் கூடும். அப்போது சிறப்பு தீர்மானமாக கொண்டு வந்து நிறைவேற்றுவதற்கு வாய்ப்பு உள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பதால் ஒற்றை தலைமை யார்? என்ற பொருள் வைக்கப்பட்டு நிறைவேற்றப்படும்.

ஆனால் ஒற்றை தலைமை சிறப்பு தீர்மானம் செல்லுபடியாகுமா? ஆகாதா? என்பது கட்சியின் சட்ட விதிகளுக்கு உட்பட்டது. அதனால் ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே தேர்ந்து எடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட வேண்டிய பொதுக்குழுவில் ஒற்றை தலைமை தீர்மானம் கொண்டு வருவது சட்டப்படி முறையல்ல. அது செல்லுபடி ஆகாது என கோர்ட்டிற்கு செல்லவும் வாய்ப்பு உள்ளது.

எனவே இந்த பொதுக்குழுவில் ஒற்றை தலைமை பிரச்சினையை பற்றி விவாதிக்காமல் அடுத்து ஒரு சிறப்பு பொதுக்குழுவை கூட்டி அதனை தீர்மானமாக கொண்டு வந்தால் கட்சிக்குள் பிரச்சினை இருக்காது.

ஆனால் எடப்பாடி பழனிசாமி தற்போது உள்ள வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள தயாராகி வருகிறார். இதனால் பொதுக்குழுவில் சலசலப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஒற்றை தலைமை இல்லாததால் கட்சியில் முடிவு எடுப்பது தாமதம் ஆகிறது. இது கட்சியின் செயல்பாட்டிற்கு பின்னடைவை ஏற்படுத்துகிறது. தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வின் தாமதமான முடிவால் பா.ஜ.க. போராட்ட அறிவிப்பை முன்னெடுத்து செல்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையில் பொதுக்குழு நடைபெறும் வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

2750 பேர் அமரக்கூடிய வகையில் இருக்கைகள் போடப்படுகின்றன. சிறப்பு விருந்தினர்களுக்கு அனுமதி இல்லாததால் சுமார் 1000 இருக்கைகள் குறைக்கப்பட்டு உள்ளது. சைவ-அசைவ உணவு, தண்ணீர் பாட்டில், வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளை திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.பென்ஜமின் தலைமையில் நடந்து வருகிறது. போலீஸ் பாதுகாப்புடன் பொதுக்குழுவை சுமூகமாக நடத்தி முடிக்க எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் திட்டமிட்டு உள்ளனர்.

Tags:    

Similar News